
மணிமேகலை பிரசுரம் வெளியீடு, எழுத்தாளர், டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து: ஆப்ரகாம் லிங்கன், ஜனாதிபதி ஆவதற்கு முன், பலர் முன்னிலையில், அவரை, 'குரங்கு மூஞ்சி' என்று, திட்டி விட்டார், ஒரு அரசு அதிகாரி.
அப்போது, அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத, லிங்கன், ஜனாதிபதி ஆன பின், திட்டியவரை கடுமையாக தண்டிப்பார் என்று, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக, அவருக்கு பல பொறுப்புகளை கொடுத்தார், லிங்கன்.
இதற்கு என்ன காரணம் என்று கேட்க, 'அவர், என்னை அவமானப்படுத்தியதை, பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. எனினும், அது என்னுள் காயத்தை ஏற்படுத்தியது. அந்த காயத்தை ஆற்ற, என்னை மேலும் தகுதியுடையவனாக உயர்த்திக் கொள்ள முடிவு செய்தேன்.
'அதற்கான முயற்சியால் தொடர்ந்து உழைத்தேன். அந்த முயற்சியாலும், உழைப்பாலும் இந்த பதவியை அடைந்துள்ளேன். இதற்கு, அவரும் ஒரு காரணம். என் நன்றிக்கடனை அவருக்கு செலுத்த ஆசைப்பட்டு, கூடுதல் பொறுப்புகளை வழங்கினேன்.
'மேலும், அவமதித்தவர்களை, பழி வாங்க, துடிப்பது அறிவீனம். அவமதித்தவரும் வருந்தும்படியாக வளர்வதே, அங்கீகாரம். அவமானத்தை, முன்னேற்றத்துக்கான மூலதனமாக்குங்கள். மனிதன் மனநிலையை மாற்றிக் கொள்வதன் மூலம், தன் வாழ்க்கையை வளமாக மாற்றிக்கொள்ள இயலும்...' என்றார்.
வாமனன் எழுதிய, 'திரை இசை அலைகள்'நுாலிலிருந்து: பானுமதி சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்புவார். அவர் நடித்த, ஒவ்வொரு தெலுங்கு படத்திலும், ஒரு தியாகராஜர் கீர்த்தனையாவது பாடி விடுவார்.
தமிழிலும் அப்படி செய்ய ஆசை. ஆனால், முடியவில்லை. தன்னை பாடச் சொல்லும் பாடல்களுக்கு, தானே மானசீகமாக ராகம் அமைத்து, தமிழ் இசையமைப்பாளர்களிடம் பாடி காட்டுவார்.
'பிரபல நடிகை பேச்சை கேட்காமல் போனால், பிழைப்பில் மண் விழுந்து விடுமோ...' என்று பயந்து, அதை ஏற்று பாடச் சொல்லி விடுவர். ஆனால், பிரபலங்களிடம் இது எடுபடவில்லை.
ஓங்கோல் வெங்கட சுப்பையா என்பவரிடம், முறைப்படி, கர்நாடக இசையை கற்றார், பானுமதி. அப்போது அவர், பானுமதியிடம், 'நீ நடிக்கிற படம் ஒவ்வொன்றிலும், ஒரு கர்நாடக உருப்படியை திணித்து விடவேண்டும்...' என, சத்தியம் வாங்கி இருந்தார்.
இவரின், கர்நாடக சங்கீத திறனை வைத்து, 1985ல், தமிழக அரசின் இசைக் கல்லுாரிக்கு, பானுமதியை முதல்வராக்கினார், எம்.ஜி.ஆர்., கண்டிப்புக்கு பெயர் பெற்ற, பானுமதி, அதையும் கண்டிப்புடனேயே நடத்தினார்.
எழுத்தாளர், எம்.ஆர்.ஜவகர் எழுதிய, 'தி ஸ்டோரி ஆப் மை லைப்' என்ற நுாலிலிருந்து: கடந்த, 1920ல், சபர்மதி ஆசிரமத்தில், பல பெரியவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார், காந்திஜி. அப்போது, அங்கு ஓடி வந்தாள், காந்திஜியின் வளர்ப்பு மகளான, லட்சுமி.
வேக வைத்து தோலுரித்த ஓர் உருளைக் கிழங்கை, அவளது பற்களில் கவ்வியபடி, 'பாபுஜி... வெளியே தெரியும் உருளைக் கிழங்கை கடிப்பீர்களா...' என்று கேட்டாள்.
அவரோ, சுற்றி உள்ளவர்கள் பற்றிய எண்ணமின்றி, ஒரு குழந்தை போல், அதை கவ்வி உண்டார்.
அவர், மஹாத்மா என்றும், ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் நிரூபித்தார். ஏனெனில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள், லட்சுமி.
நடுத்தெரு நாராயணன்