தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை

திண்ணை

திண்ணை


PUBLISHED ON : மார் 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளசை சுந்தரம் எழுதிய, 'வாங்க சிரிச்சுட்டு போகலாம்' நுாலிலிருந்து:

ஒருமுறை, பர்மா சென்றிருந்தார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர். நேதாஜியின் தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், அரசியல் ரீதியாக அங்கு சென்றிருந்தார். அதனால், அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க, அந்நாட்டு அரசு விரும்பியது.

சிவப்பு கம்பள மரியாதை கொடுப்பது, சிறந்த வரவேற்பு என்று, நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த நாட்டில் வேறொரு வழக்கம் இருந்தது; கருப்பு கம்பள வரவேற்பு.

அது எப்படி தெரியுமா...

நீண்ட கூந்தல் உள்ள அழகான இளம் பெண்கள், வரிசையாக அமர்ந்து, தலை குனிந்து, தரையில் தலைமுடியை பரப்பி இருப்பர். அதே போல், எதிர் வரிசையிலும் பெண்கள் அமர்ந்து தலைமுடியை பரப்பி இருப்பர்.

இரண்டு வரிசையிலும் உள்ள பெண்களின் தலைமுடிகள் இணைந்து, கருப்பு கம்பளம் போல் காட்சி தரும். சிறப்பு விருந்தினர், அதன் மீது நடந்து செல்ல வேண்டும். அதுவரையிலும், அப்பெண்கள் தரையை நோக்கி, தலை மற்றும் கைகளை வைத்து குனிந்தபடியே இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட வரவேற்பு, தேவருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு வந்த பிறகு தான் இந்த ஏற்பாடு பற்றி, அவருக்கு தெரிய வந்தது.

அதை கண்டதும், துணுக்குற்றார்.

'இது என்ன கொடுமை. பெண்களை சிரமப்படுத்தி இப்படி உட்கார வைத்திருப்பது பெரிய பாவம். அதுமட்டுமல்ல, அவர்களின் கூந்தல் மேல் நடந்து செல்வது, அதைவிட பெரிய பாவம். அந்த பாவத்தை, நான் செய்ய மாட்டேன். உடனே, இதை தடுத்து நிறுத்துங்கள்...' என்று, அரசருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அரசருக்கு ஒரே ஆச்சரியம்.

'இதுவரையிலும் யாரும் சுட்டிக் காட்டாத இந்த விஷயத்தை, இவர், மனிதாபிமானத்தோடு சிந்தித்து இருக்கிறாரே...' என்று நினைத்து, உடனே, அந்த வரவேற்பு முறையை நிறுத்தச் சொன்னார். பிறகு, விருந்துக்கு ஏற்பாடு நடந்தது.

கருப்பு கம்பள பிரச்னையை அதோடு விட்டு விடவில்லை, தேவர்.

'எனக்கு மட்டுமல்ல, இனி, யாருக்கும் இதுபோன்ற வரவேற்பு கொடுக்க வேண்டாம்...' என்று வற்புறுத்தினார்; 'பெண்களை அடிமைப்படுத்தும் நாடு உயர்வடைவதில்லை...' என்பதையும் வலியுறுத்தினார்.

எழுத்தாளரும், முன்னாள் போலீஸ் அதிகாரியுமான பி.ஸ்ரீ., எழுதிய, 'நான் அறிந்த தமிழ் மணிகள்' நுாலிலிருந்து:

அந்த காலத்தில், தாசில்தார் போன்ற உயர் அதிகாரிகளை, மக்கள் காண்பது அரிது.

அந்த உயர் அதிகாரிகள் பெரும்பாலும் வெள்ளைக்கார துரைகளாகவே இருப்பர். இவர்களை காண்பது, வெள்ளை காக்கையை கண்டது போல தான்.

ராமலிங்க அடிகளார் காலத்தில், பிரிட்டிஷாரின் கும்பினியர் ஆட்சி நடந்தது.

நாட்டுப்புறங்களுக்கு, மாட்டு வண்டியில் செல்வர், தாசில்தார்கள். மாட்டு வண்டியை, வேகமாய் ஓட்டி செல்வான், வண்டிக்காரன்.

தாசில்தார் வருகையை அறிவிப்பதற்காக, காட்டு பாதையில், வண்டிக்கு முன், சற்று தொலைவில், குடல் தெறிக்க ஒருவன் ஓடுவான். அவன், ஹரிஜன வகுப்பை சேர்ந்தவனாகத்தான் இருப்பான்.

அவனுக்கு, கால் வலிக்குமே, நெஞ்சு நோகுமே, அவனும் மனிதன்தானே என்பது போன்ற கவலைகள், தாசில்தாருக்கு கிடையாது.

'அது, அவன், ஊழ்வினை பயன். இது சுகபோகம்; என் அதிர்ஷ்டம்...' என்பது, அவர் நினைப்பு.

ராமலிங்க அடிகளின் கருணை உள்ளம், தாசில்தாரை வன்மையாக கண்டித்தது.

'ஓ தாசில்தாரே... இந்த சொக்காயும், அதிகார ஓட்டமும், ஆட்டங்களும் எத்தனை நாளைக்கு செல்லும்...' என, பொருள்பட, தாசில்தாரை எச்சரிக்கை செய்தார்.

'கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக' என, கும்பினி ஆட்சியை சபித்தார், ராமலிங்க அடிகள்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us