PUBLISHED ON : மார் 15, 2020

கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து:
ஆந்திர முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான, காலஞ்சென்ற, என்.டி.ராமராவ், கடைசி வரை அப்பாவியாகவே இருந்தார். இதனால், இவரை ஏமாற்றி, மருமகன் சந்திரபாபு நாயுடு, இவரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொண்டார்.
இவருடைய அப்பாவித்தனத்திற்கு, ஆரம்ப கால சினிமா வாழ்க்கையிலிருந்து ஒரு ருசிகர உதாரணம்:
விஜயா புரொடக் ஷன் சார்பில், பாதாள பைரவி என்ற படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்தார், நாகிரெட்டி. இரண்டிலும், கதாநாயகனாக நடித்தார்,
என்.டி.ராமராவ். இந்த படத்திற்காக, வாகினி ஸ்டுடியோவில், கத்தி சண்டை மற்றும் குதிரையேற்றம் பயிற்சிகளை கற்றுக் கொண்டார், என்.டி.ஆர்.,
படப்பிடிப்பு தளத்தில், அவருக்கு தரப்படும் உணவு, இரண்டு இட்லி - ஒரு வடை, ஒரு தோசை, பொங்கல், பூரி என, ஏதாவது இரு பொட்டலங்கள் தருவர். இதை, புரொடக் ஷன் பையன் தான் தருவான்.
இந்த இரு பொட்டலங்கள், ராமராவுக்கு போதாததால், புரொடக் ஷன் பையனிடம், 'இன்னொரு பொட்டலம் கொடுப்பா...' என, கேட்பார்.
'அதற்கு மேல் கொடுக்க, கம்பெனி உத்தரவிடவில்லை...' என கூறுவான், பையன்.
ஒருநாள், என்.டி.ஆர்., இப்பிரச்னையை, நாகிரெட்டியிடம் தெரிவித்தார்.
'நான், தினமும் அதிகாலையிலேயே ஸ்டுடியோவுக்கு வந்துடறேன். கத்தி சண்டை மற்றும் குதிரையேற்றம் பழகுகிறேன். இதனால், ரொம்ப பசிக்குது. எனக்கு கொடுக்கிற டிபனோட இன்னும் இரண்டு பொட்டலம் அதிகமா கொடுக்க சொல்லி, நீங்க, 'ஆர்டர்' போடணும்...' என்று பணிவோடு கேட்டுக் கொண்டார்.
உடனே ஏற்பாடு செய்து கொடுத்தார், நாகிரெட்டி.
பாதாள பைரவி படப்பிடிப்பு இரு மொழிகளிலும் முடிந்து விட்டது. இதனால், மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கலைஞர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், என்.டி.ஆரும் ஒருவர்.
உடனே, நாகிரெட்டியிடம் சென்று, 'இப்படி திடீர்ன்னு சம்பளத்தை நிறுத்திட்டா, நான் என்ன செய்வேன். சாப்பாடு, வீட்டு வாடகை, மத்த செலவையெல்லாம் எப்படி சமாளிப்பேன். இந்த சம்பளத்தை நம்பி தான், இவ்வளவு நாளா மெட்ராசிலே இருக்கேன்.
'நீங்க சம்பளம் கொடுக்கலேன்னா, குடும்பத்தோட சொந்த ஊருக்கு போறதை தவிர, வேற வழியில்லை. அதனால், தயவுசெஞ்சு, வழக்கம்போல சம்பளத்தை கொடுக்க சொல்லுங்க. நீங்க எத்தனை படங்களில் நடிக்க சொன்னாலும் நடிக்கிறேன்...' என்று, கண்கலங்கினார், என்.டி.ஆர்.,
என்.டி.ஆரின் கோரிக்கையை ஏற்று, அவரை, தொடர்ந்து வேலையில் அமர்த்தி, சம்பளமும் கொடுத்தார், நாகிரெட்டி.
நடுத்தெரு நாராயணன்
