
'கல்கி' எழுதிய, 'நான் பார்த்த நாடகங்கள்' கட்டுரையிலிருந்து: நாடகத்தில், உருக்கமான ஒரு கட்டம். சிலம்பு விற்று வருவதாக, கண்ணகியிடம் விடை பெற்று புறப்பட்டான், கோவலன்.
ராக, தாளங்களுடன் அழுகிறாள், கண்ணகி.
ராகம் பிசகாமல், தாளம் தவறாமல் அவளுக்கு ஆறுதல் கூறுகிறான், கோவலன். பின், இருவரும் பிரிந்து, தலைக்கு ஒரு திசையாக, தாளத்துக்கு இசைவாக, கால் எடுத்து வைத்துச் செல்கின்றனர்.
மேடையிலிருந்து மறைந்து விட்டாள், கண்ணகி. கோவலன், உள்ளே போகும் சமயம், அந்த நெருக்கடியான, துயரமான தருணத்தில், கூட்டத்திலிருந்து, தேச பந்து சித்தரஞ்சன் தாஸ் பாட்டின் குரல் ஒன்று எழுந்தது.
பின்னர், அக்குரல் உச்ச ஸ்வரத்தை அடைந்தது. உள்ளே போன, கோவலன், மீண்டும் மேடைக்கு வரும் வரை, கூச்சல் நிற்கவில்லை.
அவன் வந்ததும் பலத்த கரகோஷம்.
அந்த ஆரவாரம் அடங்கியதும், கண்ணகியைப் பிரிந்து, காற்சிலம்பு விற்க சென்ற கோவலன், 'அங்க தேச, வங்க தேச பந்துவை இழந்தனம்...' என்று, பாடத் துவங்கினான்.
முதலில், இந்தப் பாட்டுக்கு அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. கொஞ்ச நேரம் கேட்ட பிறகு தான், நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, தேச பந்து சித்தரஞ்சன்தாசின் மரணம் குறித்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த, கோவலன், காற்சிலம்பு விற்கப் போவதை கூட நிறுத்தி, பிரலாபிக்கிறான் என்று அறிந்து கொண்டேன். உண்மையிலேயே, எனக்கு கண்ணில் நீர் ததும்பியது. ஆனால், அது, தேச பந்து சித்தரஞ்சன்தாஸ் செத்துப் போனதற்காக அல்ல; வேறெதற்காக என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
ஏகம் பதிப்பகம், சு.குப்புசாமி எழுதிய, 'பாரதிதாசன்' நுாலிலிருந்து: புதுவையில், பள்ளி ஆசிரியராக பணி புரிந்த போது, ஆட்சியிலிருப்போரின் பகைக்கு ஆளாகி, அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஊர் மாற்றலுக்கு உள்ளாகினார், பாரதிதாசன்.
ஒரு முறை, கூனிச்சம்பட்டு என்ற சிற்றுாருக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அவ்வூரில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுகிறார்:
கூனிச்சம்பட்டு என்ற ஊருக்கு மாற்றலாகி போனேன். நான் அந்த ஊருக்கு போவதற்கு முன்பே, என்னை பற்றிய விவரங்களை, ஊர் மக்கள் மட்டுமின்றி, பணிபுரியும் ஆசிரியர்களிடமும் சொல்லி வைத்திருந்தனர்.
அதனால், தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும், வினோதமாக பார்த்து, என்னிடம் பேச அஞ்சினர். ஊரில், எவரும், எனக்கு தங்குவதற்கு வீடு தரவில்லை.
கோவில் அருகே பெட்டிக் கடை மட்டும் இருந்தது. வேறு சிற்றுண்டி கடையோ, உணவு கடையோ இல்லாததால், பெட்டிக் கடையில், காலணாவுக்கு, 10 முறுக்கு தருவர். அதை வாங்கி தின்று, குளத்து நீரை குடித்து, குளத்துப் படிக்கட்டுகளிலேயே இரவு படுத்துக் கொள்வேன். காலையில், அங்கேயே பல் விளக்கி, குளித்து, பக்கத்து ஊருக்கு சென்று, அங்கு, ஒன்றிரண்டு தோசை, இட்லி சாப்பிட்டு, பள்ளிக்குச் செல்வேன். பகலில் முறுக்கு தான் உணவு.
'பெர்னார்ட் ஷா சிந்தனைகள்' நுாலிலிருந்து: 'வெற்றியைக் கண்டு, நான் பயப்படுகிறேன். ஒருவர், வெற்றி அடைந்து விட்டார் என்றால், பூமியில், அவருடைய வேலை முடிந்து விட்டது என்று அர்த்தம்.
'ஆண் சிலந்திப் பூச்சி, பெண் சிலந்திப் பூச்சியுடன் கூடி கலந்து வெற்றியடைந்ததும், பெண் சிலந்தி, அதைக் கொன்று விடுகிறதல்லவா... அதுபோல், வெற்றியை அடைந்து முடிவதை விட, வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதையே நான் விரும்புகிறேன். நான் அடைய விரும்புவது, முன்னால் இருந்து கொண்டே இருக்க வேண்டும்; பின்னால் அல்ல...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்

