PUBLISHED ON : ஏப் 11, 2021

'பன்முக ஹிந்தி நடிகர், ராஜ்கபூர்' நுாலிலிருந்து: அண்டை நாடான பாகிஸ்தான், பெஷாவர் நகரில் பிறந்தவர், ராஜ்கபூர். நடிகர் திலிப் குமார் மற்றும் வினோத் கன்னாவும் பெஷாவரில் தான் பிறந்தனர். இவர்கள் தவிர, பாகிஸ்தானில் பிறந்த மற்றும் சில ஹிந்தி பட உலக பிரபலங்களை அறிந்துகொள்வோம்.
ராஜேந்திரகுமார் - சியல்காட், சுனில் தத் - ஜீலம்,
சாதனா - கராச்சி,
தேவ் ஆனந்த் - சாகர் கார்க்,
குல்சார் - டினா,
சுரேஷ் ஓபராய் - குயூட்டா, ராஜ்குமார் குடும்பம் - லுராலாய், ராஜேஷ்கன்னா - புரேவாலா மற்றும் அமிதாப்பச்சன் அம்மா,
தேஜி பச்சன் - பைசலாபாத்.
* ராஜ்கபூர் வீடு இன்றும் பாகிஸ்தானில் உள்ளது. இதை புதுப்பித்து, நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியை, பாகிஸ்தான் அரசு துவங்க உள்ளது
* 'ஸ்டார்டஸ்ட்' என்ற ஆங்கில இதழ், ராஜ்கபூரை, 'ஆயிரம் நுாற்றாண்டின் சிறந்த இயக்குனர்' என, கவுரவித்தது
* கனடா நாட்டின், டொரென்டோ நகரில், ஒரு தெருவுக்கு, ராஜ்கபூர் பெயரை வைத்துள்ளனர்
* ராஜ்கபூர் நடித்த பல படங்கள், ரஷ்யாவில் ஓடியுள்ளன. ஆவாரா படத்தை, ஆறு கோடி ரஷ்யர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. ராஜ்கபூர், ரஷ்யா சென்றபோது, இந்த படத்தில் அவர் பாடிய, 'மைன் ஆவாரா ஹும்' பாடலை, திரும்பத் திரும்ப பாடச் சொல்லி கேட்டனர்
* ஸ்ரீ420 படத்தில் இவர் பாடிய, 'மேரா ஜோட்டா ஹை ஜப்பானி; யே பேட்டலுான் இங்கிலீஷ் டானி; சர் பேலால் டோபிரூஸி; பிர் பி தில் ஹை இந்துஸ்தானி...' பாடல் மிக பிரபலம்.
இதன் தமிழ் அர்த்தம், 'என் காலணிகள், ஜப்பான்; அணிந்திருக்கும் ஆடை, இங்கிலாந்து; தலையில் உள்ள தொப்பி, ரஷ்யா; இருந்தாலும் என் இதயம் இந்தியன்' என்பதாகும்.
அன்னிய நாட்டு பொருட்களின் மோகம், இந்தியர்களுக்கு போகவில்லை என்பதை சுட்டிக் காட்டும் பாடல். இதை பின்னாளில் பலர், பல சந்தர்ப்பங்களில், மக்களிடம் பாடி காட்டியுள்ளனர்
* தன், 63வது வயதில் காலமான ராஜ்கபூர், 11 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்
* கடந்த, 198௭ல் ராஜ்கபூருக்கு, 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது
* ராஜ்கபூருடன் மிகவும் இணைத்து பேசப்பட்டவர், நர்கீஸ். 16 படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்
* ராஜ்கபூரின் குரலாகவே பல படங்களில் பாடியவர், முகேஷ். முகேஷ் இறந்தபோது, 'என் குரல் போய் விட்டது...' என்றார், ராஜ்கபூர்
* ஆஸ்தான இசையமைப்பாளர், சங்கர் ஜெய்கிஷன். ராஜ்கபூரின், 18 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அருணா பப்ளிகேஷன்ஸ், எஸ்.அனிதா எழுதிய, 'படித்தாலே பரவசம் - ராஜாஜியின் சுவையான உவமைகள்' நுாலிலிருந்து: அடுத்த ஆண்டு பயிரிடும் பொருட்டு, விதை நெல்லை சேமித்து வைக்கிறான், விவசாயி. பயங்கர பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்திலும், விதைக்காக வைத்திருக்கும் தானியத்தை, சாப்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டான்.
வருங்கால சமூகத்து விதை போன்றவர்கள், நம் மாணவர்கள். சுதந்திர போரிலோ, நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளிலோ அவர்களை ஈடுபட செய்வது, தவறான செயல். இந்தியாவின் வருங்கால மேன்மையை உத்தேசித்து, அவர்கள் நன்றாக படித்து, அறிவை வளர்த்து, பிற்காலத்தை சமாளிக்க தயாராக வேண்டும்.
பிச்சைக்காரர்களுக்கென்று தனி விடுதி அமைக்க வேண்டுமென்று கற்பனை செய்வது சுலபம். ஆனால், காரியம் சாத்தியமில்லை. ஊரில் கொஞ்சம் பிச்சைக்காரர்களா இருக்கின்றனர்... நகரத்திலும், நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமாய் வியாபித்திருக்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு தனி விடுதி கட்டுவது, முடிகிற காரியமல்ல. கொசுக்களை பிடித்து வைத்து விட்டால், கொசு உபத்திரவமே நீங்கிவிடும் என்று நினைப்பது போல் தான், பிச்சைக்காரர்களுக்கு விடுதி அமைக்கும் யோசனையும்.
நடுத்தெரு நாராயணன்
