PUBLISHED ON : ஏப் 18, 2021

'சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு' நுாலிலிருந்து: வறுமையால் பள்ளி செல்ல முடியவில்லை, சார்லி சாப்ளின். அவருக்கு, அம்மா தான் ஆங்கிலம் கற்பித்தார்.
சிறு வயதிலேயே நீண்ட வசனங்களை இலகுவாக மனப்பாடம் செய்து பேசுவார்.
தன், 17வது வயதில், சர்க்கசில் சேர்ந்து சாகசங்கள் செய்தார், சாப்ளின். அங்கு, மிக நீண்ட வசனங்களை, அழகாகவும், ஏற்ற இறக்கத்தோடும் பேசினார். ஒரு சிலரே அதை ரசித்தனர்; பலர், உம்மணாமூஞ்சியாக இருந்தனர்.
கோபம் கொண்ட சாப்ளின், சர்க்கஸ் நிர்வாகியிடம், 'யார் இவர்கள்... மனிதர்களா, மிருகங்களா... ரசிக்கத் தெரியவில்லையே...' என, கேட்டார்.
'சாப்ளின், அவர்கள் மேல் தவறு இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதே... எப்படி ரசிப்பர்...' என்றார், நிர்வாகி.
பிறகு, புது முயற்சியில் இறங்கிய சாப்ளின், 'பாடி லாங்வேஜ்' என்ற, உடல் மொழியை கடைப்பிடித்தார். பல பக்கங்களை கொண்ட நீண்ட வசனங்களை, உடல் அசைவுகளால், முக பாவங்களால் செய்து காட்டினார்.
அந்த மவுன வசனங்களை கண்டு உலகமே ரசித்தது; வயிறு குலுங்க குலுங்க சிரித்தது. இன்றைக்கும், உடல் மொழியின் தந்தை, அவர் தான்!
'அலை ஓசை' எம்.பி.மணி எழுதிய, 'வழி நெடுக...' நுாலிலிருந்து: பள்ளியில் படித்த காலத்தில், சிவாஜி என்று எனக்கு சொல்ல வராது. ஜிவாசி என்று தான் சொல்வேன். அதற்காக வாத்தியாரிடம் அடிபட்டிருக்கிறேன்.
அப்படிப்பட்டவனுக்கு நடிகர் சிவாஜியுடன் பழக சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி இருக்கும். சிவாஜியுடன் பழக மட்டுமல்ல, அவர் குடும்பத்தில் ஒருவனாகவே கருதப் பட்டிருக்கிறேன்.
சிவாஜியின் தம்பி வி.சி.சண்முகம் மற்றும் அண்ணன் வி.சி.தங்கவேலு மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள அனைவரும் என்னிடம் ப்ரியம் கொண்டவர்கள். சிவாஜியின், 'அன்னை இல்ல'த்தில் எனக்கு செல்ல பெயரே, 'மலை ஓசை அணி!'
பின்னாளில், 'அலை ஓசை' பத்திரிகையில், நான் எழுதிய கட்டுரை தொடர்களையெல்லாம் ஒன்று விடாமல் படித்தார், சிவாஜி.
'உன் எழுத்தில் என்னவோ இருக்குது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சில, 'கட்டிங்ஸ்' எடுத்து வெச்சிருக்கேன்...' என்று, ஒருமுறை, சிவாஜி என்னிடம் சொல்ல, பெருமை பூரிப்பில், என் காலர் உயர்ந்ததுண்டு.
ஒருமுறை, அவரை பேட்டி காண நேரம் வாங்கியிருந்தேன். அன்று, அவருக்கு படப்பிடிப்பு. அவர் வீட்டில் நாங்கள் சந்தித்து, ஸ்டுடியோவுக்கு காரில் போகும்போதே பேட்டி எடுப்பதாக திட்டம்.
அன்று, நான் ரொம்ப தாமதமாகி விட்டேன். காலை, 9:00 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 8:55க்கே, 'மேக் - அப்'புடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பழக்கம் உள்ள சிவாஜிக்கு, அன்று, என்னால் மிகவும் தாமதமாகி விட்டது.
என்னிடம் வாகனம் எதுவும் இல்லை. அதனால் தான் தாமதம் என்பதை அறிந்த சிவாஜி, தம்பி சண்முகத்திடம் சொல்லி, எனக்கு புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். என் தகுதிக்கு மிகவும் மேம்பட்டவர்களால், நான் நேசிக்கப்பட்டிருக்கிறேன். அதுவே, மிகப்பெரிய வரப்பிரசாதம்.
நடுத்தெரு நாராயணன்
