PUBLISHED ON : ஜன 16, 2022

மயிலைநாதன் எழுதிய, 'மேதைகள் தமாஷ்' நுாலிலிருந்து: சென்னையில் நடந்த ஒரு விழாவில், ராஜாஜியும், மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியமும் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும், தன்னுடன் வந்திருந்த இளம் பெண்ணை, 'இவள் என் மகள்; பெயர் சுதந்திரா, கல்லுாரியில் படிக்கிறாள்...' என்று, ராஜாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார், அமைச்சர் சுப்ரமணியம்.
ராஜாஜிக்கு வணக்கம் தெரிவித்தார், அமைச்சரது மகள்.
'சுதந்திரா, பெயர் நன்றாக இருக்கிறதே... நான் இந்தப் பெயரில் கட்சி ஆரம்பிப்பேன் என்று, உங்களுக்கு முன்பே ஜோசியம் தெரியுமோ...' என்று கேட்டு புன்னகைத்தார், ராஜாஜி.
இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள், 'கொல்'லென சிரித்து விட்டனர்.
'நாடு சுதந்திரம் பெற்ற, 1947-ல், இவள் பிறந்ததால், சுதந்திராதேவி என்று பெயர் வைத்தேன்...' என்று கூறி சமாளித்தார், சி.சுப்ரமணியம்.
ஒரு சமயம், வின்ஸ்டன் சர்ச்சிலிடம், 'சிறந்த அரசியல்வாதிக்கு வேண்டிய தகுதிகள் என்ன...' என்று கேட்டார், ஒருவர்.
'எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்லக் கூடிய தொலைநோக்கு பார்வை வேண்டும்; தன்னுடைய அரசியல் ஆருடம் பலிக்காவிட்டால், அதற்குத் தெளிவான காரணங்களை கற்பித்துச் சொல்கிற சாமர்த்தியமும் வேண்டும். அவன் தான் சிறந்த அரசியல்வாதி...' என்றார், சர்ச்சில்.
மரணக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார், பிரபல ஹாலிவுட் இயக்குனர், சாமுவேல் கோல்டுவின்.
சாகும் பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகன், அந்தக் காட்சியில் சரியாக நடிக்கவில்லை. உடனே, நடிகனைப் பார்த்து, 'உன் மரணத்தில் உயிர் இல்லையப்பா, அதற்குக் கொஞ்சம் உயிர் கொடு...' என்றார், இயக்குனர்.
'இந்திய பிரபலங்களின் வாழ்வில்' நுாலிலிருந்து: ஆன்மிகத்தில் கவிஞர் கண்ணதாசன், தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம், 'பக்குவத்திற்கும், பரிபக்குவத்திற்கும் என்ன வித்தியாசம்...' என்று அவரிடம் விளக்கம் கேட்டனர்.
'நான் அரசியலில் முதலில் ஒருவரை தலைவராக ஏற்று, அடுத்து இன்னொருவரை தலைவராக ஏற்று, கசப்பான அனுபவங்களைப் பெற்றேன்; இது பக்குவம். அதற்கு பிறகு, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி, கவிதை, ஆன்மிகம் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தத் துவங்கினேன். இதுதான் பரிபக்குவம்...' என்றார், கவிஞர்.
நடுத்தெரு நாராயணன்
