PUBLISHED ON : பிப் 13, 2022

இங்கிலாந்து நாட்டின் மீது படையெடுக்க முடிவெடுத்தான், நெப்போலியன். இங்கிலாந்து நாடு, கடற்படையில் மிகச்சிறந்து விளங்கிய விஷயத்தை நெப்போலியன் அறிந்திருந்தான். போலோன் என்ற இடத்தில் தன் பாசறையை அமைத்து, வீரர்களுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்தான்.
ஒருநாள், ஆங்கிலேய சிப்பாய் ஒருவன், பிரான்ஸ் சிறையிலிருந்து தப்பி, போலோன் பகுதிக்கு வந்தான். அப்பகுதியில் ஒரு படகை உருவாக்கி, இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான். அச்சமயத்தில், பிரான்ஸ் வீரர்கள், அவனை பிடித்து நெப்போலியன் முன் நிறுத்தினர்.
அந்த வீரனிடம், 'இங்கிலாந்து வீரனே, படகு செய்து கடல் வழியாக இங்கிலாந்து செல்ல முயற்சித்தது உண்மையா...' என, விசாரணை நடத்தினான், நெப்போலியன்.
'உண்மைதான். நீங்கள் அனுமதித்தால் இக்கணமே என் நாட்டிற்கு சென்று விடுவேன். அங்கே, வயதான என் தாய் ஆதரவின்றி தவித்துக் கொண்டிருக்கிறாள். அவளை காண செல்வேன்...' என்றான்.
இதைக் கேட்ட நெப்போலியன், மனம் நெகிழ்ந்து, உடனே அவ்வீரனுக்கு போதிய பணத்தை கொடுத்து, தாயை காண செல்லுமாறு வழியனுப்பி வைத்தான்.
லண்டனில் படித்து, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர், 'தினத்தந்தி' நிறுவனர், ஆதித்தனார். லண்டன் மாநகரத்தில் அவர் படித்த காலத்தில் லண்டன் நகர செய்திகளை கட்டுரைகளாக்கி தமிழக பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்.
அதுமட்டுமின்றி, ஆங்கில நாளிதழ்களுக்கும், ஆப்ரிக்க நாட்டு பத்திரிகைகளுக்கும் செய்தி கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை, தன் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்.
இந்த பழக்கமே பிற்காலத்தில், பத்திரிகை துறையில் அவரை ஈடுபட செய்தது. 1929ல், லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில், சுதேசமித்திரன் பத்திரிகையின் நிருபராக பணியாற்றினார்.
அம்மாநாட்டில் கலந்து கொண்டார், காந்திஜி. மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அவசரமாக வெளியே சென்றார், காந்திஜி. பின்னர், சிறிது நேரத்தில் திரும்பி வந்து மாநாட்டில் கலந்து கொண்டார்.
காந்திஜி ஏன் வெளியே சென்றார் என்பதே செய்தி.
ஆட்டம் கண்ட அவருடைய பல் ஒன்றை பிடுங்கி எறிந்து வரவே, காந்திஜி வெளியே சென்றார் என்ற செய்தியை அறிந்து, எழுதினார், ஆதித்தனார்.
சிறிய விஷயத்தையும், சுவாரசியமான செய்தியாக்கும் கலையை மாணவ பருவத்திலேயே அவர் அறிந்து வைத்திருந்தார்.
அவரின் இந்த ஆற்றலே தினத்தந்தியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.
ஒருமுறை, ராஜஸ்தான் பல்கலை கழகத்தில் அரசியல் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார், அண்ணாதுரை. அந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்க, கல்லுாரியின் துணைவேந்தரை அணுகினர்.
அண்ணாதுரையின் எளிமையான தோற்றத்தை அறிந்திருந்த அந்த துணைவேந்தர், அவரை சாதாரணமாக எடை போட்டு, அதற்கு மறுத்து விட்டார். வேறொருவர் தலைமையேற்க, அக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
அக்கூட்டத்தில், சுமார் இரண்டு மணி நேரம் அருமையான ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார், அண்ணாதுரை.
அண்ணாதுரையின் பேச்சை கேட்ட அந்த துணைவேந்தர், மேடையேறி, 'இதுபோன்ற ஒரு ஆங்கில பேச்சை நான் இதுவரை கேட்டதே இல்லை...' என்று மனதார பாராட்டி மகிழ்ந்தார்.
நடுத்தெரு நாராயணன்
