
ஒருசமயம், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார், அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வழியில் முகமெல்லாம் அழுக்கான நிலையில், வாய்க்குள் விரலை வைத்துச் சூப்பியபடி ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தார்.
அவன் அருகில் சென்றவர், 'சிறுவனே... உன் முகத்தை பார்க்க சகிக்கவில்லை. ஒரே அழுக்காக இருக்கிறது. நீ உன் முகத்தைக் கழுவி சுத்தமாக வந்தால், உனக்கு பணம் தருவேன்...' என்றார்.அதைக் கேட்ட சிறுவன் மகிழ்ந்து, வேகமாக ஓடினான். சிறிது நேரத்தில், முகத்தை கழுவி சுத்தமாக வந்தான்.அவனிடம், பணத்தைக் கொடுத்த ஐன்ஸ்டீன், 'இந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறாய்...' என்று, கேட்டார்.
அவரை கூர்ந்து பார்த்த சிறுவன், 'ஐயா... உங்கள் தலை முடியைப் பார்க்கவே சகிக்கவில்லை. இந்தப் பரட்டை முடியை ஒழுங்காக வெட்டிக் கொண்டு வந்தால், இந்த பணத்தை உங்களுக்கே பரிசாக கொடுத்து விடுவேன்...' என்றான்.
இந்தியாவின் பிரதமராக லால்பகதுார் சாஸ்திரி இருந்தபோது, அவரிம் பேட்டி எடுக்கவும், புகைப்படம் எடுத்து, பத்திரிகையில் பிரசுரிக்கவும் விரும்பினர், பத்திரிகை நிருபர்கள். ஆனால், அவர் அதற்கான அனுமதி தரவில்லை.
'ஏன்?' என்று கேட்டார், அவரது உதவியாளர். அதற்கு, 'தாஜ்மகால் உருவாகுவதற்கு இரண்டு வகை கற்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒன்று, கட்டடத்திற்கு அடித்தளமாக பயன்பட்ட பாறாங் கற்கள்; மற்றொன்று, அழகிற்காக பயன்பட்ட சலவைக் கற்கள். அவற்றில், பாறாங் கற்கள் தான் அந்த கட்டடத்தை தாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை வெளியில் தெரிவதில்லை. 'ஒரு மனிதன், எவ்வளவு தான் புகழ் பெற்றிருந்தாலும், வெளியில் தெரியாத அந்தப் பாறாங் கற்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று, என் ஆசிரியர் சொல்வார். அதைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன். ஆகவே, எனக்கு எந்த விளம்பரமும் வேண்டாம்...' என்றார், சாஸ்திரி.
புதுவை சக்தி நாடக சபாவில், 1952ல், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பணிபுரிந்து வந்தார். அவர், தான் எழுதி, பத்திரிகையில் வெளியான கவிதைகளை எடுத்து வந்து, பாவேந்தர் பாரதிதாசனிடம், அபிப்பிராயம் கேட்பது வழக்கம்.
ஒருசமயம், 'அகல்யா' என்ற புனைபெயரில் அவர் எழுதிய பொதுவுடைமைக் கொள்கைக் கவிதை, ஒரு பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதை எடுத்து வந்து, பாரதிதாசனிடம் காட்டினார், கல்யாணசுந்தரம்.
அதைப் படித்து பரவசமடைந்த பாரதிதாசன், 'தம்பி... இதுபோன்ற எழுச்சிமிக்க பாடல்களை எழுதும் சக்தி படைத்துள்ள, நீ, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற உன் பெயரிலேயே இனி எழுது. அப்போது, தமிழ் உன்னை வாழ்த்தும். உன்னையும் உலகம் அறியும்...' என்று கூறி, வாழ்த்தினார்.பின்னாளில், பாவேந்தரின் வாக்கு பலித்தது.