
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், எங்கு சென்றாலும் கீழ்கண்டவை இல்லாமல் பயணிக்க மாட்டார்.
1. கிடைக்காத சூழலில், சமாளிக்க ஏதுவாய் அவருடைய ரத்த வகை.
2. துக்கம் அனுசரிக்க வேண்டி வந்தால், அணிய கருப்பு ஆடை.
3. டீ குடிக்கும்போது சாப்பிட ப்ளேட் கேக், க்ரீம் உறைந்த கேக் மற்றும் ஸ்காட்டிஷ் பழ கேக் ஆகியவை கண்டிப்பாக இடம்பெறும்.
'டைம்' இதழும், இந்தியர்களும்...அமெரிக்காவிலிருந்து வெளி வரும், 'டைம்' இதழ், 1923ம் ஆண்டிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கிறது.பொதுவாக, இந்தியாவில், பொது தேர்தல் வந்தால், இந்திய தலைவர்கள், 'டைம்' அட்டையில் இடம்பெறுவர். ஜூலை 16, 2012, இதழ் அட்டையில், மன்மோகன்சிங் படம் வெளியிட்டு, 'தி அண்டர் அச்சீவர்' என, தலைப்பிட்டிருந்தது.
கடந்த, 2019, பொது தேர்தலின்போது, மோடியை அட்டையில் வெளியிட்டு, 'இன்டியாஸ் டிவைடர் இன் சீப்' என, தலைப்பிட்டிருந்தது. இது, இந்தியாவில் பெரும் அமளியை கிளப்பியது.* 'டைம்' இதழில், ஜவஹர்லால் நேரு, ஆறு முறை இடம்பெற்றார். இந்திரா, நரேந்திர மோடி ஆகியோர், மூன்று முறை இடம் பெற்றுள்ளனர்
வினோபாவே, சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் படேல், ராஜிவ், சோனியா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் ஒருமுறை இடம்பெற்றுள்ளனர்* சினிமா நட்சத்திரங்களான பர்வீன் பாபி, அமிர்கான் மற்றும் ஐஸ்வர்யாராய் ஆகியோர் இடம்பெற்றனர்.
சச்சின் டென்டுல்கர், சாய்னா நெக்வால் மற்றும் வீரேந்தர் ஷேவாக் ஆகியோர், 'டைம்' இதழின், ஆசிய பதிப்பின் அட்டைகளில் இடம்பெற்றனர்.
'டைம்' இதழ், 1927ம் ஆண்டு முதல், அந்தந்த ஆண்டின், சிறந்த மனிதரை தேர்ந்தெடுத்து, பிரசுரித்து வருகிறது. 1930ல், ஆண்டின் சிறந்த மனிதராக, காந்திஜி இடம்பெற்றிருந்தார்.கடந்த, செப்., 14, 2001 இதழில், செப்., 11ல் நடந்த, உலக வர்த்தக மையத்தை தீவிரவாதிகள் தாக்கியதை, இதழ் முழுவதும் வெளியிட்டிருந்தது.
இது, 'டைம்' இதழின் விற்பனையை கூட்டியது. 10 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்றன.மற்றொரு குறிப்பிடத்தக்க இதழ், 'ப்ளேபாய்!' இது, 1953, டிசம்பர் முதல் வெளியிட்டது. இதன் மைய பக்கத்தில், மர்லின் மன்றோவின், 'ப்ளோ - அப்' வெளியாகி இருந்தது. மர்லின் மன்றோ படம் வெளியான, இந்த இதழின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? 6.35 லட்சம் டாலர்கள். இந்திய மதிப்பில், 4.76 கோடி ரூபாய்!
ஒருசமயம், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ஒரு கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். அப்போது, அங்கு கூடியிருந்த பெண்கள் இடைவிடாமல் பேசிக் கொண்டே இருந்தனர். கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், பெண்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனாலும், பெண்களின் பேச்சு அடங்கவில்லை.அப்போது, பண்டிதமணி எழுந்து, 'பெண் - மணிகள் அல்லவா... மணிகள் பேசாமல் இருக்குமா? அவை ஒலித்துக் கொண்டு தானே இருக்கும்...' என்றார்.அதைக் கேட்டதும், பெண்கள் அனைவரும் சிரித்து விட்டனர். பின், அமைதியாகினர்.அதன்பின், கூட்டம் அமைதியாக நடந்தது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்ற, முதல் பிரிட்டிஷ் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில். இவர், மிகச்சிறந்த ஓவியரும் கூட. இயற்கைக் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக வரைவது இவருக்கு நிறைய பிடிக்கும்.ஒருநாள், ஓய்வுநேரத்தில் அழகான இயற்கை காட்சியை வரைந்து கொண்டிருந்தார், சர்ச்சில்.அப்போது, அங்கே வந்த அவரது நண்பர், அந்த ஓவியத்தை பார்த்துவிட்டு, 'நீங்கள் ஏன் இயற்கை காட்சிகளை மட்டுமே வரைகிறீர்கள்...' என்று கேட்டார்.'அதற்கு காரணம் இருக்கிறது நண்பரே... தன்னை அழகாக வரையவில்லை என்று, எந்த ஒரு இயற்கைக் காட்சியும் என்னிடம் புகார் சொல்லாது அல்லவா...' என்றார், புன்சிரிப்போடு சர்ச்சில்.
நடுத்தெரு நாராயணன்

