தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 06, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்டர் பெரு.மதியழகன் எழுதிய, 'சிறந்த நண்பர்கள் - வெற்றியின் துாண்கள்' நுாலிலிருந்து:

அரசியலில், சமூக களங்களில், ஈ.வெ.ரா.,வும், ராஜாஜியும் எதிரெதிர் துருவங்களாக இருந்தவர்கள். கொள்கை ரீதியாக மிகக் கடுமையான விமர்சனங்களை பொதுமக்கள் மத்தியில் வைத்தவர்கள். ஆனால், நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள்.

கடந்த, 1920ல், ஒத்துழையாமை இயக்கம் துவங்கப்பட்டது. தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, நீதிமன்ற விலக்கு, பள்ளிக்கூட விலக்கு மற்றும் பதவி விலக்கு ஆகியவை, ஈ.வெ.ரா.,வை கவர்ந்தன.

எனினும், தீண்டாமை ஒழிப்பிற்கும், ஜாதி ஒழிப்பிற்கும் ஓர் அரிய வாய்ப்பு என்பதால், உடனே காங்கிரசில் சேர்ந்தார், ஈ.வெ.ரா.,

ராஜாஜி, ஈ.வெ.ரா., நட்பு, வலிவும், பொலிவும் பெற்றது. பின்னாளில், தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாமே, ஈ.வெ.ரா.,வை மையமாக வைத்தே நடந்தன. அந்த மாற்றங்களுக்கும், ஏற்றங்களுக்கும் முதல் படி, ஈ.வெ.ரா., காங்கிரசில் இணைந்தது. அதற்கு, ராஜாஜியின் நட்பே காரணமாக இருந்திருக்கிறது.

கடந்த, 1937ல், சென்னையில், ராஜாஜி தலைமையில் மந்திரி சபை பதவியேற்றது. முதல்வர் ராஜாஜி, ஹிந்தி மொழியை கட்டாய பாடமாக்குவதாக அறிவித்தார்.

'தமிழ்நாடு தமிழருக்கே...' என்று முழக்கத்தை முன் வைத்தார், ஈ.வெ.ரா.,

ராஜாஜியை எதிர்த்தாரே தவிர, தனிப்பட்ட முறையில் அன்புணர்ச்சிக் குன்றாத நட்புறவை தொடர்ந்தார், ஈ.வெ.ரா.,

ராஜாஜியை மதிப்புக் குறைவாக விமர்சனம் செய்து எழுதப்படும் கருத்துக்கள், தம், விடுதலை நாளேட்டில் இடம்பெறக் கூடாது என்பதில், உறுதி பூண்டிருந்தார்.

இதன் காரணமாகவே, ஈ.வெ.ரா.,வின், 86ம் ஆண்டு பிறந்தநாள் விழா மலருக்கு, வாழ்த்து செய்தி அனுப்பிய ராஜாஜி, 'விடுதலையும், பெரியாரும் என் அன்பார்ந்த எதிரிகள்...' என்று குறிப்பிட்டிருந்தார்.

இருவருக்கும் இடையேயான நட்பால், இன்றும் சிறந்த நண்பர்களாக நம்மால் பேசப்படுகின்றனர்; இன்றைய தலைவர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கின்றனர்.

***

அக்பரின் அரிய சாதனைகளுக்கு, நெடிய அரசாட்சிக்கு, பல ஆற்றலாளர்கள், அவர் அவையை அலங்கரித்தனர். ஆனால், அவர்கள் எல்லாரையும் விட, தலையாய சிறப்பு பெற்றவர், அக்பரின் அமைச்சரும், அருமை நண்பருமான, பீர்பால்.

ஒருமுறை ஏதோ கோபத்தில், 'இங்கே இருக்காதீங்க எங்கேயாவது போயிருங்க...' என்று, பீர்பாலை கடிந்து கொண்டார், அக்பர்.

ஆனால், நண்பரை பிரிந்த ஏக்கம், அக்பரை வாட்டியது.

ஒருநாள், அரசவை கூடியிருந்த சமயம், அரண்மனை சிப்பந்தி ஓடி வந்து, 'மகாராஜா, உங்களை சந்திப்பதற்காக, ஞானி ஒருவர் வாயிலில் காத்திருக்கிறார்...' என்றார்.

பீர்பால் போன பின், அவரைப் போன்ற அறிவாளியின் நட்பின்றி வாடிய அக்பருக்கு, இது ஒரு வாய்ப்பாகவே பட்டது. உடனே, அவரை உள்ளே அனுமதிக்கும்படி உத்தரவிட்டார்.

ஞானிக்கு ஓர் இருக்கையளித்து அமரச் சொல்லி, 'ஞானியே, நீங்கள் எல்லாம் அறிந்த மேதை என்பதால், இங்கே ஏதாவது ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட முடியுமா...' என்றார், அக்பர்.

'ஏன் முடியாது, உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள், அரசே. உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன்...' என்றார், ஞானி.

'என் அருமை நண்பரும், அமைச்சருமான பீர்பாலை உடனே கொண்டு வரவேண்டும்...' என்றார்.

ஞானி எதுவும் பேசாமல், தம் செயற்கை முடியையும், தாடியையும் நீக்கினார். அரசவையில் கூடியிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். அக்பரால் அவரது கண்களையே நம்ப முடியவில்லை.

'உமக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்...' என்ற ஞானியிடம், 'என் நண்பர் பீர்பால் தான் வேண்டும்...' என்று அக்பர் சொன்னது, அவர் தம் நட்பின் உயர்வை, உன்னதத்தை உணர்த்துவதாய் உள்ளது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us