
'சதிலீலாவதி' படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா. (எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., பாலையா ஆகியோர் துணை வேடங்களில் அறிமுகமான படம்) அவர் சொல்கிறார்:
அப்போதெல்லாம், பின்னணிப் பாட்டு கிடையாது. நடிப்பவர்களே பாட வேண்டும்; நடிக்கும் போதே பாட வேண்டும். சதிலீலாவதிக்கு இசையமைப்பாளர்கள், சர்மா பிரதர்ஸ் என்பவர்கள். சதிலீலாவதியில் நானே தான் பாடினேன். பாடல்களைப் படமாக்குவது கடினமான காரியம், அந்த நாட்களில்.
கேமரா ஓட ஆரம்பித்தவுடன் பாட வேண்டும். கேமராவுக்குப் பின், பின்னணி இசைக்காரர்கள், வாத்தியங்களை வாசிப்பர். படமாக்கப்படுவதும், ஒலிப்பதிவு ஆவதும் ஒரே நேரத்தில். ஒரு இடத்தில் கேமராவை வைத்து, பாட்டின் ஓரடியையோ, இரண்டடிகளையோ எடுத்து விட்டால், பிறகு கேமராவை வேறு கோணத்தில் வைத்து அல்லது வேறு இடத்துக்குக் கொண்டு சென்று வைத்து, அடுத்த அடியை எடுப்பர்.
பின்னணி வாத்தியக்காரர்களும், தத்தம் இசைக்கருவிகளைத் தூக்கிக்கொண்டு இடம் மாற வேண்டும். படத்தில் பின்னணி பாடுவது என்பது, பல நாட்களுக்குப் பிறகு தான் வந்தது.
—'தமிழ் சினிமாவின் கதை!' நூலிலிருந்து...
நான் வீட்டை விட்டு ஓடி வந்து, நாடகக் கம்பெனியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பெற்றோரையும் பார்க்கவில்லை; அண்ணன்களையும் பார்க்கவில்லை. ஆறு வயது சிறுவனாக ஓடி வந்தேன். இப்போது, 11 வயது. கம்பெனியில் கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்கி, ஒரு தீபாவளிக்கு ஊருக்குப் போனேன். குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்ததும் மெய் சிலிர்த்தது. வீட்டுக்கு வந்தவுடன் நான் முதலில் பார்த்தது, என் தங்கை பத்மாவதியையும், என் தம்பி சண்முகத்தையும் தான்.
இரண்டு பேரும் பெரியவர்களாக இருந்தனர். நான் அவர்களை, அதற்கு முன் பார்த்ததில்லை. அவர்களுக்கு முன் பிறந்த என் மூத்த சகோதரர்கள் இருவரும் இறந்து போய்விட்ட செய்தியை, நான் நாடகக் கம்பெனியில் இருந்த போது கேள்விப்பட்டேன். ஆனால், பத்மாவதி, சண்முகம் இருவரையும், அவர்கள் பிறந்தது முதல் எனக்குத் தெரியாது. அவர்களை அன்று தான் முதன்முதலில் பார்த்தேன். என் அண்ணன் தங்கவேலுவையும் பார்த்தேன். அந்த நேரத்தில், என மனநிலையும், என் தாயாரின் மனநிலையும் எப்படி இருந்திருக்கும்?
நானும், என் அம்மாவும், நீண்ட நேரம் கட்டிப் பிடித்து அழுதோம். அதன் பிறகு சமாதானமாகி, அந்தத் தீபாவளியைக் கொண்டாடினோம்.
—'எனது சுயசரிதை' நூலில், சிவாஜி கணேசன்.
அண்ணாதுரை அப்போது, திராவிடர் கழகத்தில் இருந்தார். மதுரையில் ஒரு கட்சிக் கூட்டம். அண்ணாதுரை பேசி முடிக்கும் தறுவாயில், பல கேள்வித் தாள்கள் மேடைக்கு வந்தன. ஒவ்வொன்றாக, 'மைக்கில்' வாசித்துக் காட்டி, பதிலும் சொல்லிக் கொண்டு வந்தார். 'தூத்துக்குடி மாநாட்டில், முட்டாள்கள் தான் கட்சிக்குத் தேவை என்று ஈ.வெ.ரா., சொல்லியிருக்கிறாரே... இதுபற்றி உங்கள் கருத்து?' என்ற கேள்வியை வாசித்தவுடன், கூட்டத்தில் பரபரப்பு. அண்ணாதுரை தமக்கே உரிய பாணியில், ஒரு சிட்டிகைப் பொடியை நாசியிலே ஏற்றிக் கொண்டு சொன்னார்:
ஈ.வெ.ரா., சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். முட்டாள்களைப் புத்திசாலிகளாக்குகிற கட்சி திராவிடர் கழகம். ஆகவே தான், முட்டாள்கள் தேவைப்படுகின்றனர். மற்ற கட்சிகளுக்கோ, பாவம், அறிவாளிகள் தேவைப்படுகின்றனர். எதற்கு? அந்தக் கட்சியிலுள்ள முட்டாள்களைப் புத்திசாலிகளாக்குவதற்கு!'
***
நடுத்தெரு நாராயணன்