
சபர்மதி ஆசிரமத்தில், காந்திஜியின் அறைக்குப் பின்னால் தான், எண்ணெய் செக்கு ஓடிக் கொண்டிருந்தது. எள்ளைப் புடைத்து, சுத்தம் செய்யும் வேலை, முன் தாழ்வாரத்தில் நடந்து வந்தது. எள் சுத்தம் செய்யும் வேலையை, அன்னை கஸ்தூரிபாவும் மற்றும் சில பெண்களும் செய்தனர்.
ஒரு நாள் ஆசிரமச் செயலர், பலவந்த் சிங்கை அழைத்து, 'இந்த எள் மிகவும் சன்னமாக இருக்கிறது. இதில் உள்ள குப்பையும் சன்னமாக இருக்கிறது. அதனால், எள்ளிற்கும், குப்பைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. தூசு, தும்பட்டை கண்ணுக்குப் புலப்படவில்லை. ஒரு வேலைக்காரியை வைத்து, சுத்தப்படுத்திக் கொண்டால் நல்லது...' என்று கூறினார் கஸ்தூரிபா.
மறுநாளே பலவந்த் சிங், ஒரு வேலைக்காரப் பெண்மணியை ஏற்பாடு செய்து விட்டார்.
அன்றைய காலத்தில், ஒரு மூட்டை எள்ளைப் புடைத்து, தூசு, தும்பட்டைகளை நீக்கிக் கொடுக்க, இரண்டணா முதல், நான்கணா வரை கூலியாட்களுக்கு கொடுத்தனர். எள் சுத்தம் செய்ய வந்த பெண்மணி, தன் வேலையை அப்போது தான் துவங்கினாள்...
அந்த நேரம் பார்த்து, காந்திஜி அங்கே வந்து விட்டார். கூலியாள் எள் சுத்தம் செய்வதைப் பார்த்ததும், 'இந்த பெண்ணை வேலைக்கு அமர்த்தியது யார்?' என்று கேட்டார்.
உடனே பதில் சொல்ல, அங்கிருந்த யாருக்கும் தைரியம் வரவில்லை. பலவந்த் சிங் தயங்கியபடி, ' நான் தான் அமர்த்தினேன்...' என்றார்.
'இந்த வேலையை நான், கஸ்தூரிபாவிடம் தானே ஒப்படைத்திருந்தேன். நீ ஏன் அதில் குறுக்கிட்டாய்?'
'பாபுஜி... எள்ளும் சன்னமாக இருக்கிறது; அதிலுள்ள, தூசுகளும் சன்னமாக இருக்கிறது. அன்னையால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அதோடு, இந்த எள் சுத்தம் செய்யும் வேலைக்கு, அதிக கூலியும் கிடையாது. ஒன்றும் பெரிய செலவில்லை...' என்றார் பல்வந்த் சிங்.
காந்திஜி, ஒரு வினாடி யோசித்தார். 'சரி, இன்று நான், என்னுடைய மற்ற வேலைகளை நிறுத்திக் கொண்டு, எள் சுத்தம் செய்யும் வேலையை முதலில் செய்கிறேன்...' என்றார்.
கூலி ஆள் பெண்மணியிடமிருந்து முறத்தை வாங்கி, அவரே எள் சுத்தம் செய்யலானார்.
பக்கத்து அறையிலிருந்து, கஸ்தூரிபா ஒடி வந்தார். காந்திஜியின், கையிலிருந்து முறத்தைப் பறித்து, 'நீங்கள், உங்கள் வேலைகளைக் கவனியுங்கள். நாங்களே, எள் புடைக்கும் வேலையைப் பார்த்துக் கொள்கிறோம்...' என்றார்.
பிறகே, காந்திஜி அங்கிருந்து சென்றார். தாமே எள்ளைப் புடைத்து சுத்தம் செய்தார் கஸ்தூரிபா.
—'காந்தியின் வாழ்க்கையில்...' நூலிலிருந்து...
***
விலைவாசி உயர்வைக் கண்டித்து, 1962ல், தி.மு.க., நடத்திய போராட்டத்தில், அண்ணாதுரையும், அவருடன், பத்து பேரும் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒரு தொண்டர் பெயர் இளஞ்செழியன். அவர்களுள், ஆம்பூர் சம்பங்கி என்றொருவர் இருந்தார். நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர்; ஆனால், அவர் சிரிக்க மாட்டார்.
ஒருநாள், வெளியிலிருந்து சிறைக்குள் பிரியாணி வரவழைக்கப்பட்டது. பாத்திரங்களில் உணவு வந்தது. அதைப் பார்த்தவுடன், மகிழ்ச்சி பொங்க ஓடி வந்தார் இளஞ்செழியன், அண்ணாதுரையிடம் இந்த செய்தியைத் தெரிவிக்கும் ஆர்வத்துடன்!
தன் குண்டு உடலைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடி வந்த இளஞ்செழியனை மடக்கி, 'என்ன விஷயம்? ஏன் ஓடி வருகிறாய்?' என்று சம்பங்கி கேட்டார். அதற்கு அவர், 'சிக்கன் பிரியாணி வந்திருக்கு. அண்ணாதுரையிடம் சொல்லப் போகிறேன்...' என்றார்.
உடனே, சம்பங்கி சிரிக்காமல், 'சிக்கன் பிரியாணின்னு நீ சொன்னால், உனக்கு சரியா இங்கிலீஷ் தெரியலேன்னு அண்ணாதுரை நினைப்பார்!' என்றார்.
'அப்படீன்னா, என்னன்னு சொல்றது?'
'கிச்சன் பிரியாணி என்று சொல்!'
இளஞ்செழியனும், அண்ணாதுரையிடம் ஓடிப் போய், 'அண்ணா... 'கிச்சன்' பிரியாணி வந்திருக்கு...' என்றார்.
'இளஞ்செழியா... எல்லா பிரியாணியும் கிச்சன் பிரியாணி தான்!' என்று அண்ணாதுரை சொல்ல, இளஞ்செழியன் மேலும் குழம்பினார். அவரிடம், 'நீ இங்கு வரும் போது, வழியில் சம்பங்கியைப் பார்த்தாயா?' என்று கேட்டார். அவர், 'ஆமாம்...' என்று சொல்ல, 'அதுதான், சிக்கன் - கிச்சன் ஆகி விட்டது...' என்றார் அண்ணாதுரை.
***
நடுத்தெரு நாராயணன்