PUBLISHED ON : மார் 11, 2012

தபால் தலையைச் சுற்றி, ஓட்டைகள் காணப்படுகிறதே, இவை எப்படி தோன்றின? நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன், லண்டன் நகரத்தில் ஒரு சத்திரத்தில், பத்திரிகை நிருபர் ஒருவர் உட்கார்ந்து, அன்றைய செய்திகளை எழுதி முடித்தார். வெளியூர் பத்திரிகைகளுக்கு, அந்தச் செய்திகள் உடனடியாகப் போய்ச் சேர வேண்டும். எழுதியவற்றை, அந்த நிருபர் அவசரம் அவசரமாக உறைகளில் போட்டு, வாயை ஒட்டினார்.
பையிலிருந்து, நீண்ட அகலமான காகிதத்தை எடுத்தார். அவை அத்தனையும், தபால் தலைகள். தனித்தனியாகக் கிழிப்பதற்குக் கத்தியைத் தேடினார். கத்தி கிடைக்காமல் போகவே, ஒரு குண்டூசியை எடுத்து, அதனால் கிழித்தார். கோணல் மாணலாகக் கிழிந்தது. எப்படியோ அதை ஒன்றாகச் சேர்த்து ஒட்டினார்.
சத்திரத்தில் இருந்த, ஹென்றி ஆர்க்சர் என்பவர், அந்த நிருபர் பட்ட பாட்டையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். தபால் தலைகளைச் சுற்றிலும் ஓட்டைகள் இருந்தால், கிழிப்பதற்குச் சுலபமாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.
அவரே தபால் தலைகளைச் சுற்றி, ஓட்டைகள் போட்டுத் தரக்கூடிய இயந்திரம் ஒன்றைத் தயாரித்தார். அதன் உதவியால், மிகுந்த பலன் கிடைக்கிறது என்பதை அறிந்த பிரிட்டிஷ் தபால் துறை, அந்த இயந்திரத்தை ஹென்றி ஆர்க்சரிடமிருந்து, விலை கொடுத்து வாங்கியது.
— 'தபால் தலைகளின் கதை' நூலிலிருந்து...
***
சுதந்திரப் போராட்டத் தியாகி, எல்.எஸ்.கரையாளர், 1940ல் தன் திருச்சி சிறை அனுபவங்களை பற்றிச் சொன்னது...
சத்தியாகிரகிகள், கடைத்தெருவிலிருந்து, ஜெயிலுக்கு வர வேண்டிய தங்களுக்கு தேவையான சாமான்களின் பட்டியலைக் குறித்துக் கொடுத்து, ஜெயிலரிடம் அனுமதி பெற வேண்டும். பஜாரிலிருந்து, ஒரு வார்டன் வாங்கிக் கொண்டு வருவான். வந்ததும், அவைகளை அவரவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
சாமான்களை அனுமதிக்கும் ஜெயிலர், மிகவும் வேடிக்கையாக நடந்து கொண்டார். சோப்பை அனுமதித்துக் கொண்டே இருப்பார்; திடீரென்று அனுமதிக்க மாட்டார். ஒருவருக்கு அனுமதிக்கும் ஒரு சாமான், இன்னொருவருக்குத் தரப்பட மாட்டாது.
எந்த சமயத்தில், எந்த சாமான் தரப்படும், தரப்பட மாட்டாது என்பது, யாருக்குமே தெரியாது. ஆகவே, நாங்கள் ஒரே சாமானைத் திரும்பத் திரும்ப, எழுதிக் கொண்டே இருப்போம். ஒருநாள் இல்லா விட்டால், ஒருநாள் அது அனுமதி யாகி வந்து விடும் என்று ஒரு நம்பிக்கை. அப்படியே நடந்து கொண்டும் இருந்தது.
ஒரு வேளை ஜெயிலர், வேலைத் தொந்தரவின் காரணமாக, சலித்துப் போய், சில நாட்கள் பட்டியலை பார்க்காமலே, கையெழுத்துப் போட்டு விடுவார் போலிருக்கிறது.
ஒரு தடவை, பி.எஸ்.சொக்கலிங்கம், 'ஒரு கைப் பெட்டியும், அந்தப் பெட்டியில் போடுவதற்கு, பாச்சா உருண்டைகளும் வேண்டும்' என்று, எழுதியிருந்தார். பெட்டி அனுமதிக்கப் படவில்லை; பாச்சா உருண்டைகள் மட்டும், இரண்டு டஜன் வந்து சேர்ந்தன. அவற்றை என்ன செய்வது?
இன்னொரு முறை, டாக்டர் சுப்பராயன், சமஸ்கிருதத்தில், ஒரு புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியிட்ட கம்பெனியின் பெயர், கிடைக்கும் இடம் இவற்றை குறித்திருந்தார். இவை ஒவ்வொன்றையும் பார்த்து, தனித்தனிப் பொருள் என்று எண்ணி, ஒவ்வொன்றையும் அனுமதிப்பதற்கு அறிகுறியாக, 'சரி' என்ற குறி போட்டிருந்தார் ஜெயிலர்!
தேன், நெய் அனுமதிப்பர். ஆனால், எந்த விதமான எண்ணெயும் அனுமதிப்பதில்லை; நாமாகவும் வரவழைத்துக் கொள்ள முடியாது. சர்தார் வேதரத்தினம் பிள்ளை யோசனை செய்து, ஒருநாள் தன் பட்டியலில், 'கொப்ரி-கா-தேல்' என்று, எழுதி வைத்து விட்டார். ஜெயிலர் 'சரி' என்றார். ஒரு பெரிய தேங்காயெண்ணெய் புட்டி, சிறைக்குள்ளே வந்து விட்டது!
— எல்.எஸ்.கரையாளர் எழுதிய, 'திருச்சி ஜெயில்!' நூலிலிருந்து...
நடுத்தெரு நாராயணன்
