தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மூன்று அவதாரங்களின் பெற்றோர்!

மூன்று அவதாரங்களின் பெற்றோர்!

மூன்று அவதாரங்களின் பெற்றோர்!


PUBLISHED ON : ஜூன் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகைக் காக்க தசாவதாரம் எனும், பத்து அவதாரங்களை எடுத்தவர், திருமால். இதில் மூன்று அவதாரங்களுக்கு, பெற்றோராக இருந்தது யார் தெரியுமா? முனிவர்களிலேயே முதன்மையானவரான காஷ்யபரும், அவரது மனைவி திதியும் தான்.

காஷ்யபரை, பிரம்மாவின் மானசபுத்திரர் என்பர். அதாவது, மனதால் நினைத்த மாத்திரத்தில் பிறந்தவர். பெண் சேர்க்கையின்றி பிறப்பவர்கள் அதீத சக்தி கொண்டவர்களாக இருப்பர். நினைத்ததை நடத்திக் காட்டுவர்.

இன்னொரு வரலாற்றின் படி, இவர், பிரம்மாவின் மானசபுத்திரர்களில் ஒருவரான மரீசிக்கும், அவரது துணைவி கலைக்கும் பிறந்தவர். காஷ்யபரின் தங்கையின் பெயர் பூர்ணிமா.

காஷ்யபரின் தந்தை மரீசிக்கு, உலக உயிர்களை உருவாக்கும் பிரம்மாவின் பணியில் பெரும் பங்கு இருந்தது. காஷ்யபரும் இதே பணியைச் செய்தார். அவர், பிரம்மாவின் மற்றொரு மானசபுத்திரரான, தட்ச பிரஜாபதியின், 13 மகள்களை மணந்தார்.

இவர்களில் முக்கியமானவர்கள் அதிதி மற்றும் திதி. அதிதியின் வயிற்றில் இந்திரன், சூரியன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், திதியின் வயிற்றில் இரணியன், இரண்யாட்சன் உள்ளிட்ட அசுர வம்சத்தினரும் பிறந்தனர்.

எல்லா குழந்தைகளுக்கும் நல்லதையே கற்றுத் தந்தார், காஷ்யபர். ஆனால், தேவர்கள் நல்லவர்களாகவும், அசுரர்கள் ஆணவம், பொறாமை கொண்டவர்களாகவும் வளர்ந்தனர்.

இதனால், தன் குழந்தைகளைத் திருத்த காஷ்யபர், பல பிறவிகளை எடுக்க வேண்டியதாயிற்று. இதற்காக, இவர், திருமாலை அணுகினார்.

அசுர பிள்ளைகளைத் திருத்த, தசாவதாரம் எடுத்தார், திருமால். அதில், வாமனர், ராமன், கிருஷ்ணன் ஆகிய அவதாரங்களுக்கு காஷ்யபரும், அதிதியும் பெற்றோராக இருந்தனர். கடவுளுக்கே பெற்றோர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர்கள் இவர்கள்.

மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் ஆகிய அவதாரங்களுக்கு பெற்றோர் இல்லை. ஏனெனில், இவை பூச்சி மற்றும் மிருகம் சார்ந்தவை.

முதல் மனித அவதாரமான வாமனர், இதையடுத்து ராமன், கிருஷ்ணன் ஆகியோருக்கும் காஷ்யபரும், அதிதியுமே பெற்றோராக இருந்தவர்கள். வாமனரை, காஷ்யபரும், அதிதியும் நேரடியாகப் பெற்றனர்.

அடுத்தடுத்த பிறவிகளை இவர்கள் எடுத்த போது தசரதர்- --- கவுசல்யா, வசுதேவர்- - தேவகி என்ற பெயர்களுடன், ராமனையும், கிருஷ்ணனையும் பெறும் பாக்கியத்தைப் பெற்றனர்.

பெங்களூரு பழைய விமான நிலையத்திலிருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள சூரிய நாராயணர் கோவிலில், சூரியன் சிலைக்கு கீழே காஷ்யபர்- - அதிதி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் புண்ணியம் செய்தவர்கள், இவர்களைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறுவர்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us