PUBLISHED ON : அக் 27, 2019

சுற்றுலா என்றால் நம்மவர்களுக்கு, உடனே வெளிநாடு தான் நினைவு வரும். இந்தியாவிற்குள் சுற்றிப் பார்க்க எத்தனையோ இடங்கள் இருப்பதும், அவற்றை பார்க்க வேண்டும் என்று தோன்றுவதும், அபூர்வம்.
அரபு நாடான குவைத்தில் பணிபுரியும் நான், விடுமுறையில் இந்தியா கிளம்பும்போது, 'எந்த நாட்டுக்கு சுற்றுலா...' என்பர்.
சமீபத்தில், இந்தியா கிளம்பியபோது, 'உலகத்துலயே பெரிய சிலை, இந்தியாவில் திறந்திருக்காங்களாமே... பார்க்க போகலியா...' என்றனர்.
அப்போதே, அந்த கனமே, வல்லபாய் படேல் சிலையை பார்க்க, முடிவு செய்தேன்.
நாட்டின் ஒருங்கிணைப்புக்கு வித்திட்டவர், இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேல். அவரது சிலையை பார்க்காமல் விடலாமா!
சொந்த ஊர் வந்து, சுற்றுலா நிறுவனத்தினரிடையே கேட்டால், 'தாய்லாந்துக்கு போகலாம்... மலேஷியா செல்ல, சலுகை இருக்கு... சிங்கப்பூர், அந்தமான் மற்றும் மாலத்தீவு...' என, பட்டியலிட்டனர்.
'உங்களிடம், எங்கே போகலாம் என யோசனை கேட்கவில்லை. படேல் சிலையை மையப்படுத்தி, நான்கு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்; இல்லையெனில், நானே பார்த்துக் கொள்கிறேன்...' என்றேன்.
'முடியாதுன்னு இல்லை சார். உங்களுக்காக ஏற்பாடு செய்து தருகிறோம்...' என்று, களத்தில் இறங்கினர்.
படேல் சிலை திறந்ததிலிருந்தே, தினம், 30 ஆயிரம் சுற்றுலா பயணியருக்கு குறைவில்லாமல் வருகை தருகின்றனர். சனி, ஞாயிறு கூட்டம் தாங்காது என்ற தகவல் கிடைத்தது.
குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில், சரோவர் அணைகட்டுக்கு எதிரே, சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம், 597 அடி.
இச்சிலைக்கான ஆரம்ப முயற்சி, அக்டோபர், 7, 2010ல் எடுக்கப்பட்டது. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அன்று, குஜராத்தின் முதல்வராக இருந்த, நரேந்திர மோடி இத்திட்டத்தில் இறங்கினார்.
இதற்காக, 'சர்தார் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட்' என்ற கமிட்டி உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் விவசாயிகள் பயன்படுத்திய, உபரியாக உள்ள இரும்புகள், அன்பளிப்பாக தர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 36 அலுவலர்கள் முயற்சியால், ஆறு லட்சம் கிராமங்களிலிருந்து, 5 லட்சம் டன் இரும்புகள் வந்து சேர்ந்தன.
இச்சிலை வைக்க வேண்டி, ஆதரவாக, உலகிலேயே அதிக அளவில், இரண்டு கோடி கையெழுத்துகள் பெறப்பட்டன. டிச., 15, 2013ல், இதற்காக நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப்படி, சிலை நிர்மாணிக்கும் முன்பே பலவித சாதனைகள்.
படேலின், 138வது பிறந்த நாளான, அக்., 31, 2014ல், டெண்டர் அடிப்படையில், எல் அண்ட் டி., நிறுவனத்துக்கு பணி வழங்கப்பட்டது. 45 மாதங்களில் பணி முடிக்கப்பட்டு, சாதனை படைத்தது.
இந்த சிலை, 5,200 டன் இரும்பு,
16 ஆயிரத்து, 500 இரும்பு பட்டைகள்,
22 ஆயிரத்து, 500 டன், செப்பு தகடு, 75 ஆயிரம் சதுர அடியில் கான்கிரீட்,
12 சதுர கி.மீ., பரப்பளவு இடத்தில், 2,700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு, எல் அண்ட் டி., நிர்வாகமே இதை பராமரிக்கும்.
எங்களது சுற்றுலா திட்டத்தில், படேல் சிலை, கடலில் உள்ள கேலியாக் கோவில், கோவா - புதுச்சேரி போன்ற, யூனியன் பிரதேசமான, டியூ தீவு, சோம்நாத் கோவில் மற்றும் அகமதாபாத் என, திட்டம் வரையறுக்கப்பட்டது.
வதோதராவிலிருந்து, ஒரு மணி நேர கார் பயணம். இச்சிலையை காண, சாதாரண கட்டணம், 350 ரூபாய். சிறப்பு கட்டணம், 1,000 ரூபாய். 'ஆன்லைனில்' முன்பதிவு செய்யலாம்.
சாதா கட்டண சுற்றுலா பயணியரை, பஸ்சில் ஏற்றி உள்ளே அழைத்துச் செல்கின்றனர். சிறப்பு கட்டண நபர்களின் கார்கள், உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
சிலை அமைந்திருக்கும் இடத்திற்கு, 11 கி.மீ., முன், 'வணக்கம்! உலகின் மிகப்பெரிய சிலை' என்ற அலங்கார வளைவு வரவேற்கிறது. துாரத்தில் செல்லும்போது, நிழலாய், ஓவியமாய் சிலையின் பின்புறம் தெரிய ஆரம்பித்து, நெருங்க நெருங்க, வளர்ந்து, நிமிர்ந்து, கம்பீர தோற்றமளிக்கிறது.
சாதுபெத் தீவின் மலை முகட்டில், 'ஸ்டேட் ஆப் யூனிட்டி' எழுத்துகள், துாரப் பார்வையில் பளிச்சென்று தெரிகின்றன.
உணவு கூடங்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் என, குடும்பம் முழுக்க நிறைவாய் அனுபவிக்க, பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலையில் நடைபெறும், விளக்கொளி காட்சி, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
நாங்கள், மதியமே சென்று விட, எங்களுக்கு, 3:00 மணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 'அதுவரை, சர்தார் சரோவர் அணையை சுற்றி பார்க்கலாம்...' என்றனர். அங்கிருந்து காரில், படகு சவாரிக்கு அழைத்து சென்றனர். ஒருவருக்கு, 250 ரூபாய் கட்டணம்.
'நர்மதாவின் இந்த பக்கம் குஜராத்; அந்த பக்கம், மஹாராஷ்டிரா எல்லை...' என, சுட்டிக் காட்டி, படகை திருப்புகின்றனர்.
சிலைக்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது. 'பான்பராக்' பயன்படுத்த அனுமதியில்லை. அதுமட்டுமின்றி, உணவு பொருட்களுக்கும் அனுமதியில்லை. எடுத்து சென்றிருந்த, நொறுக்கு தீனியை பிடுங்கி, குப்பையில் போட்டு விட்டனர்.
சிலையை அடைய அவ்ளோ துாரம் நடக்கணுமா என்கிற மலைப்பை போக்கும் விதமாக, ஆங்காங்கே, 'எஸ்கலேட்டர்' வசதி செய்யப்பட்டுள்ளது.
சிலையின் பீடத்திற்குள் சென்றதும், பெரிய ஹால் உள்ளது. அங்கே, படேலின் பிரமாண்ட தலை மட்டும் உள்ள சிலை வைக்கப்பட்டுள்ளது.
சிலை உருவான விதம் பற்றிய புகைப்பட கண்காட்சி மற்றும் உருவாக்கிய சிற்பி, ராம் வான்ஜி சுதார் பற்றிய குறிப்பு ஆகியவை கண்ணில் படுகின்றன.
பீடத்தின் உள்ளே, 'லிப்ட்' வசதி செய்யப்பட்டுள்ளது. அது, சிலையின் நெஞ்சு பாகம் வரை அழைத்துச் செல்கிறது. அங்கிருந்து பார்த்தால், மலை, நதி அனைத்தும், கண்கொள்ளா காட்சியாக தெரிகிறது.
பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள், புதுமண தம்பதியர், காதலர்கள் என, அந்த பகுதியே களை கட்டுகிறது. புகைப்படம் எடுத்து, எடுத்து, யாருக்கும் அந்த பிரமாண்டத்தை விட்டுச்செல்ல மனம் இல்லை.
வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டிய, இரும்பு மனிதரின் கரும்பு கோட்டை இது... பார்க்க தவறாதீர்!
உலகின் உயரமான சிலைகள்!
* இந்தியா, குஜராத் மாநிலம், படேல் சிலை, 597 அடி.
* சீனா, கெனான் மாகாணம், ஸ்பிரிங் கோவில், புத்தர் சிலை, 502 அடி.
* தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மர், புத்தர் சிலை, 381 அடி.
* சீனா, ஹெனான் மாகாணம், கியான் இன் சிலை, 324.8 அடி.
* ரஷ்யா தலைநகர், மாஸ்கோ, பேரரசர் முதலாம் பீட்டர் சிலை, 322 அடி. மாஸ்க்வா நதியில் கட்டப்பட்டுள்ளது.
* அமெரிக்கா, நியூயார்க் நகர், சுதந்திர தேவி சிலை, 305 அடி.
* தமிழகம், கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை, 133 அடி.
* தென் அமெரிக்க நாடான பிரேசில், ரியோ டி ஜெனிரோ நகர், மீட்பர் கிறிஸ்து சிலை, 130 அடி.
* எகிப்தின், ஸ்பிங்ஸ் சிலை, 66 அடி.
என். சி. மோகன்தாஸ்