PUBLISHED ON : ஜன 09, 2011

* அந்த நினைவு
அடுக்குகளில் எந்த
அடுக்கில் நீ ஒளிந்திருக்கிறாய்
புரியவில்லை...
ஆனால், அடிக்கடி
நான் விரும்பாத வேளையிலும்
கூட என்னில்
எட்டி எட்டிப் பார்க்கிறாய்...
* அந்த வசந்த காலங்களை
இந்த கசந்த காலங்களோடு
ஒப்பிடும் போது...
அது என் வாழ்வில்
எவ்வளவு பெரிய பொற்காலம்
என்பது இப்போது
உள்ளே ஒளிர்கிறது
உணர்வுத் திரியில்...
* அந்தத் தீயை
விளக்காகத் தான்
வெளிச்சம் தர பயன்படுத்த
நினைக்கிறேன்...
ஆனால், நீ மட்டும்
எனக்குள் விழித்து
எழுந்து என்னையே
எரியச் செய்து
விட்டுப் போய் விடுகிறாய்...
* பஸ்பமாகி, சாம்பலாகித்
திரும்பத் தான்
இன்னொரு பிறவி
எடுத்து எனக்குள்
எழுகிறேன்...
* விட்டுச் சென்ற
காலடிச் சுவடுள்
அந்த சுண்டு விரலின்
விரிவில் ஏனோ
உன் மருதாணி
வரைந்த வெண்சிவப்பு
பாதங்களைத் தான்
நினைவுப்படுத்தி விட்டுப்
போகின்றன...
* ஏன் எனக்குள்
அடிக்கடி விழிக்கிறாய்...
எத்தனையோ அடுக்குகள்
மறைந்து மறந்து
போன போது...
நீயும் அத்தோடு
தொலைந்து போவாய்
என்று தான்
எண்ணியிருந்தேன்...
* ஆனால், நினைவுகளில்
தொலைந்து போக
வேண்டியவைகள் தான்
அதிகமாக வந்து
ஞாபக விளிம்புகளில்
குடி கொண்டிருக்கின்றன...
அந்த விளிம்பு
முழுவதும்
உன் கறுப்பு - வெள்ளை
விழிப் பூக்கள்
நிறைந்து வழிய...
* ஒழிந்து போ
என்று சாபமிட
விரும்புகிறேன்
முனிவனாக இருந்திருந்தால்...
ஆனால், முட்டிப்
பார்க்கும் உன்
நினைவுகளை எறிய
முடியாத ஏழை மானிடன்
நான் என்ன செய்ய...
— ரஜகை நிலவன், மும்பை.
