PUBLISHED ON : ஆக 26, 2012

தீ அணைப்போம் வாருங்கள்!
* தீ - எப்போதும்
எரிந்து கொண்டுதான்
இருக்கிறது - நம்
ஒவ்வொருவருக்குள்ளும்!
* சிலர் இதயங்களில்...
கோபமாக, தாபமாக,
வெறுப்பாக, விரக்தியாக,
இன்னும் பலர் உள்ளங்களில்
பொறாமையாகக்கூட
எரிந்து கொண்டு தான்
இருக்கிறது!
* பல சமயங்களில் பிறரை
எரிக்கவும் செய்கிறது...
மனதாலும், செயலாலும்
சுடுசொற்களாலும் சேர்த்து!
* ஆற்றாமையால்
இயலாமையால்
ஓரிரு சமயங்களில்
தன்னைத் தானே
எரித்துக் கொள்கிறது!
* எப்போதும் மனதில் - தீ
புகையும் போது தெரிவதில்லை...
கோபமாய் பற்றும் போதுகூட
நமக்குப் புரிவதில்லை...
ஜோதியாய் எரியும் போது,
அது பிறர் உள்ளத் தீயாய்
இருந்தாலும் கூட - அதில்
குளிர் காய்ந்து விடுகிறோம்!
* அங்கு எரிந்து போனது
பிறர் மனங்களெனும் போதும்
காரணம், நாமெனும் போதும்
வருந்துவதே
வாழ்க்கையாகிறது!
* நம்மில் - யாராயிருந்தாலும்
கோபத்தீயுடன் எழுந்து விட்டால்,
இழப்புத் துயருடன்
அமர்வது தானே விதி!
* முயன்று பாருங்கள்...
நம்மில் ஒட்டியுள்ள - பாசப்
பற்றுகளைத் தூக்கி எறிய
ஆசைத்தீ அணைந்து போகும்!
* சகோதரத்துவத்தை
சமப்படுத்த -
பகைமைத் தீ பறந்து போகும்...
அன்புக் கரங்களால்
அரவணைக்க
பொறாமை தீயும்
புகைந்து போகும்!
* நிறபேதமின்றி
சமத்துவமாய் கை கோர்க்க
ஜாதித்தீ - சட்டென்று
சரிந்து போகும்!
* வாழ்வில்... பொறுமையுடன்
அமைதி நீர் ஊற்றும்போது
நம்மில் எரியும் எந்தத் தீயும்
மறைந்து போய் - மனதில்
இன்பப்பூ பூப்பதென்பது
உறுதியாகும்!
— ர.அர்ஜூன் சபரி, திருப்பூர்.
