PUBLISHED ON : அக் 14, 2012

அ நிறம் | அளவு
அப்பா!
* கண்மூடி உன் கைகளில்
கிடந்த போது...
எனக்கான கனவுகளை
நீ சுமந்தாய்!
* ஆறடி உயரத்தை
அரையடியாய் குறுக்கி
அம்பாரி நான் ஏற...
ஆனந்தமாய் நீ ரசித்தாய்!
* 'அ' எழுதியதற்கே...
'அறிவாளி என் மகள்' என
ஆனந்த கூத்தாடினாய்!
* என் ஆசைகளுக்கு
அஸ்திவாரமிட்டதில்...
உன் தேவையை
நீ மறந்தாய்!
* இரவும், பகலும்
எனையே நினைத்தாய்!
உன் வியர்வையை
உணவாய் தந்தாய்!
* என்னை சிலையாக்க
உன்னை சிதைத்துக்
கொண்டாய்!
* கல்யாணம் செய்வித்து
கடனாளியாகி நின்றாய்!
* நீ கொடுத்த கல்வியால்
பணங்காய்க்கும் மரமாய்
நான்!
* வயோதிகமும், வறுமையும்
உன்னை வாட்ட...
ஒரு நூறு உனக்கு கொடுக்க
எனக்கோ உரிமையில்லை!
* உயிர் கொடுத்த உத்தமனே...
என்னை மகளாய்
பெற்றதனால்
என்ன சுகம் கண்டாய் நீ?
— ப.திலகவதி, தேனி.
