PUBLISHED ON : ஜன 13, 2013

தை மகள் வருகிறாள் தரணி மணக்க!
* தைமகள் வருகிறாள்
தரணி மணக்க...
வாசல் தெளித்து
வழியெங்கும் கோலமிட்டு
பூக்களால் அலங்கரித்து
புதுமகளை வரவேற்போம்!
* புதுப்பானை வாங்கி
பொன் மஞ்சள் மாலைகட்டி
ஓலை நறுக்குகளால்
உலைப் பொங்கல் பொங்கட்டும்!
எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்
ஏகாந்தம் கொடுக்க
பச்சரிசி மணக்க
படைப்போம் பொங்கலினை!
* பால் பொங்கும் பரவசத்தில்
பூமி மகிழட்டும்...
செங்கரும்பு காய்கறிகள்
செவ்வாழை கனிகளுடன்
தலைவாழை இலை வைத்து
தை மகளை வரவேற்போம்!
* பொங்குக பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...
எனும் வாழ்த்தொலி
எத்திசையும் ஒலிக்கட்டும்!
* உழவர் சிறக்கவும்
ஊர் மக்கள் மகிழவும்
தரணி மகிழ்விக்க
தை மகள் வருகிறாள்...
அத்தைமகளின் வரவு
அத்'தை' மகளின் வரவுபோல்
ஆனந்தத்தை
அள்ளி இறைக்கட்டும்!
* கரும்பின் சுவையும்
பொங்கலின் குழைவும்
மஞ்சள் மணமும்
மனித குலம் பெறட்டும்!
* ஏலம் முந்திரி
திராட்சை வெல்லம்
இவையெல்லாம் சேர்ந்து
இனிப்பை கூட்டல் போல்
மனிதர்கள் சேர்ந்து
மனிதத்தின் புகழ்கூட்ட
தை மகள் வருகிறாள்
தரணி மணக்க...
வரும் தை மகளை வணங்கி
தாய்போல் வரவேற்போம்!
— வளர்கவி, கோவை.
