
காதலுக்கு மருந்து போடுகிறேன்!
* காதலே...
உன் வரையறை தான் என்ன?
* மொழிகள் பிறக்கும் முன்
நீ பிறந்ததாலோ என்னவோ
உன்னை வரையறுக்க
எங்களால் முடியவில்லை
இன்று வரை!
* வார்த்தைகளில் வார்த்தெடுத்து
உன்னைச் செதுக்குகிறோம்
ஒவ்வொருவரும் வெவ்வேறு
சிலையாகவே!
* இன்று வரை நீயும்
ஒரு மதமாகவே
விதவிதமான கலாசாரத்தின்
பிரதிபலிப்பாய்
உலகத்து வீதிகளில்
உட்கார்ந்து
விளையாடிக் கொண்டிருக்கிறாய்...
கடவுளும், நீயும்,
வேறில்லை என்பதாலா?
* ஆதாமும், ஏவாளும்
ஆக்கி வடித்த கூட்டாஞ்சோற்றில்
நீ பிறந்திருக்கலாம்...
கையில் ஆப்பிளுடன்
ஹார்ட்டின் வடிவத்தில் - என்பது
எங்கள் ஐதீகம்!
* வள்ளுவன் வடித்தான்...
காதலுக்குள் காமம் என்று
உன்னை வைத்து
ஒரு ஓவியம் படைத்தான்!
* நவீன வாலிபன் உடைத்தான்...
பழைய மரபு
அது எனக்கூறி
காமத்திற்குள் காதல் வைத்து
கலாசாரப் பின்னணியில்
புதுக்காதலைப் படைத்தான்
அதற்கு கடையும் விரித்தான்!
* காவியங்களில் நீயோ
தெளிந்த நீரோடை...
இந்தக் காலத்தில் நீயோ
கலங்கிச் செல்லும்
கழிவு நீரோடை!
* உந்தன் உடை களையப்பட்டு
நீ காயம்பட்டிருப்பது
நிஜம்!
* உண்மை சொல்
காதலே உன் வரையறை
தான் என்ன?
* அடுத்த தலைமுறை
உன்னைத் தீண்டும் முன்
மருந்து போடுகிறேன்!
- த.மலைமன்னன், புனல்வேலி.

