PUBLISHED ON : மே 19, 2013

கொடுக்க ஆயத்தமாவோம்!
* கேட்டும் கிடைக்காமல்
சலித்துக் களைத்த
எல்லாரும்
புரிந்து கொள்ள வேண்டியது
அவசியமாகிறது...
கேட்பதை விட
கொடுப்பது எளிதாகவும்
ஏதுவாகவும் இருப்பதை!
* தரம் மிகுந்த எதுவும்
தானாய் வரவேற்கப்படும்
என்ற உண்மை
அறிவுறுத்திக்
கொண்டேயிருக்கிறது...
தரமானதைக் கொடுக்க
ஆயத்தமாய்
இருக்கச் சொல்லி!
* கொடுக்கத் தெரிந்தவர்
ஒருபோதும்
செய்யத் தேவையில்லை...
பறித்து எடுக்கும்
பாதகத்தை!
* கொடுப்பவரே
பெறமுடியும் என்ற விதி
அன்பைப் போலவே
அனைத்திற்கும் உண்டு!
* வாடிய செடி கூட
நாம் கேட்காமலேயே
பூரிப்போடு
பூவைத் தந்து விடும்
அதன் வேருக்கு
நீரைக் கொடுத்து விட்டால்!
* உழைப்பைக் கொடுக்க
நாம் முனைப்பாய்
இருந்தால்...
வற்புறுத்தலின்றி
வந்து சேர்ந்து விடுகிறது
உரிமையும், ஊதியமும்!
* சோர்ந்து வருபவருக்கு
ஆறுதலாய்க் கொடுக்க எல்லாரது
கைவசமும் இருக்கிறது
ஒரு புன்னகையேனும்!
* எடுக்க எடுக்க
நிரம்பி வழியும்
அட்சயப் பாத்திரங்கள்
அகிலத்தில் அனேகம்
விரவிக் கிடக்கின்றன
இக்கலியுகத்தில் கூட...
* ஆனாலும்...
அறிந்து கொள்வோம்
அவற்றைக் கண்டறியும்
கொடுப்பினையாளர்கள்
கொடுக்கத் தெரிந்த
கொடையாளிகள்
மட்டும் தான் என்று!
— கீர்த்தி, கொளத்தூர்.
