PUBLISHED ON : மே 26, 2013

உனக்காக ஓர் இதயம்....
* மறுபடியும் உன்
சந்திப்புகளோ
உரையாடல்களோ
கடைக்கண் பார்வைகளோ
நிகழாத வரை
நின்று போகாது என்
நிகழ்காலம்!
* நம்மிடை
சிறகடிக்கும் கனவுகளையும்,
கரம் பிடிக்கும் ஆசைகளையும்
வார்த்தை முற்றுப்புள்ளிகளால்
இறகொடித்து வழியெங்கும்
தூவிக்கொண்டு
முன்னோக்கி நகர்கிறாய்!
* என்ன செய்வது?
வீதியெங்கும் சிதறிய
புள்ளிகளின் தடைகளாய்
பின்னோக்கி நகர்கின்றன நம்
காதலும், சந்தோஷமும்!
* ஒரு வேளை நீ
காகக்கூட்டில்
முட்டையிடும் குயில்கள் போல
காத்திருக்கலாம் அல்லது
தொட்டி மீனின்
நீந்தும் இலக்குகளுக்காக
பறந்து விரியும் வானின்
எல்லைகளை நீ
விரும்பாதிருக்கலாம்!
* இல்லை...
ஓடு மீன் ஓட
உறு மீனுக்காகவும்
காத்திருக்கலாம்!
* எது எப்படியோ...
சுற்றும் இந்த பூமியில்
நம் சந்திப்புகள்
என்றாவதொரு நாள்
நிகழாமலா போகும்!
* அப்போது நிஜங்கள் நிச்சயம்
உன்னைக் கைது செய்யும்!
* மனம் பிடுங்கி
மனம் கொன்றவருக்கு
தண்டனை
மன்னிப்பாகவும் இருக்கலாம்.
மறுப்பதிற்கில்லை.
குற்றவுணர்வுகளின் பிடியில்
குலையறுந்து
குற்றுயிராகப் போகலாம்...
தடுப்பதும் சாத்தியமில்லை!
* அப்போதும் கூட
உனக்காகத் துடிக்க
எப்போதும் ஓரிதயம்
என்னிடமிருக்கிறது
புரிந்து கொள் அன்பே...
வாழ்வின் தொடக்கப்புள்ளி
புரிதலின் ஆரம்பத்தில் தான்
புதைந்திருக்கிறது!
— 'செல்லம்' ரகு, திருப்பூர்.
