PUBLISHED ON : ஜூலை 06, 2014

அ நிறம் | அளவு
காதல் யாசகமில்லை!
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
பிடித்திருக்கிறது!
உன் பின்னால்
அலைந்து திரிய,
அவகாசமில்லை எனக்கு!
உன்னை
கெஞ்சிக் கூத்தாட,
நான்
பிச்சைக்காரனில்லை!
ஒற்றை ரோஜாவை
காம்புடன் நீட்டுவதோ,
ஆங்கில வார்த்தையை
இரவல் வாங்கி,
'ஐ லவ் யூ' சொல்வதோ
காதலின் வெளிப்பாடல்ல...
அவை,
ஆங்கிலேயனின் எச்சம்!
உன்னிடம்
பெண்மை இருக்கிறது;
என்னிடம் ஆண்மை இருக்கிறது
உன்னிடம்,
இருபது ஆண்டுக்கான
அழகிருக்கிறது;
என்னிடம்,
அறுபது ஆண்டுக்கான
அன்பிருக்கிறது!
ஜாதி, மதத்தை புதைத்து
மனிதத்தை மட்டும் விதைத்து
ஒரே ஒரு புன்னகை சிந்தி,
உன் உயிரில் என்னை
பதியம் போடு...
புதிதாய் ஒரு
பூகோளம் பூக்கட்டும்!
— பெ.நீலமேகம்,
மதுரவாயல்.
