PUBLISHED ON : ஆக 03, 2014

அ நிறம் | அளவு
எதிர்ப்பார்க்கிறேன்!
எதிர்பார்ப்புகள் இல்லாத
உன் நட்பை
எதிர்பார்க்கிறேன்!
என் குறைகளைக் கிழித்து
மனதை ரணப்படுத்தாமல்
குறைகளைக் குணப்படுத்தும்
மூலிகை வார்த்தைகளை
எதிர்பார்க்கிறேன்!
உலகமே
என்னை ஒதுக்கினாலும்
நான் ஒதுங்க
நிழல் கொடுக்கும்
உன் அரவணைப்பை
எதிர்பார்க்கிறேன்!
கணத்திற்கு கணம்
கணக்குப் பார்த்தே
வாழும் மனிதர்களுக்கு மத்தியில்
கணக்கில்லாமல் பழகும்
உன்னை எதிர்பார்க்கிறேன்!
வெல்கிற போது
தட்டுவதற்காக அல்ல,
நான் வீழ்கிற போது
தாங்குவதற்காக
உன் கைகளை எதிர்பார்க்கிறேன்!
எதிர்பார்ப்புகளில் தான்
ஏமாற்றம் துவங்குகிறது
என்பதை அறிந்திருந்தும்
எதிர்பார்க்கிறேன்
எதிர்பார்ப்பு இல்லாத
உன் நட்பை!
— கவிதாசன், கோவை.
