PUBLISHED ON : ஆக 17, 2014

அ நிறம் | அளவு
தேடல்!
நம் மனக்குளத்தின்
அறுபடாத வேர்களே
தேடலின் முகவரி!
தேடலின் பயணம்
எங்கு அற்றுப் போகிறதோ
அங்கு வாழ்வின் பயணம்
முற்றுப் புள்ளியாய்
தன்னை முடித்துக் கொள்கிறது!
அறிவியலாய்
ஆன்மிகமாய்
அன்பின் ஊற்றாய்
அறிவின் தாகமாய்
தேடல்களின் கரங்கள்
நீளுகின்றன!
மானுடப் பரிணாமம்
இயற்கையின் தேடலினால்
இன்னுயிர் பெற்று
இயங்கிக் கொண்டிருக்கிறது!
மனித மனங்களும்
புதுப்புது தேடலினால்
தன்னை
புதுப்பித்துக் கொண்டேயிருக்கின்றன!
தேடுதல் ஒன்றே
மனித இதயங்களை
திறக்கும் மந்திரத் திறவுகோல்!
தேடுதல் இல்லையெனில்...
நிஜங்களின் தரிசனங்கள்
நிராகரிக்கப்படும்!
வாழ்க்கை வட்டத்தினுள்
வலைபட்டு
வறண்டு கிடப்போம்!
புன்னகை சிந்தும்
இதழ்கள் கூட
பொலிவிழக்கும்!
ஆதலினால்
தேடுவோம்...
அன்பை
அறிவை
அமைதியைத் தேடி
நம் பாதங்கள் நகர்ந்து
கொண்டேயிருக்கட்டும்!
— பாரதி கிருஷ்ணன்,
சங்கராபுரம்.
