
எப்போது கிடைப்பாள், என் மகள்?
கன்னம் சிவக்க முத்தமிட்டு
கால் கழுவி விட்டு
கைபிடித்து பள்ளிக்கு நடத்திச் சென்றுள்ளேன்!
கால்களை தோளில் போட்டு
கதை சொல்லி, தலை வாரி
பேன் எடுத்துள்ளேன்!
என் மடி அவளுக்கு இருக்கை
என் நெஞ்சு அவளின் படுக்கை
என் கைகளோ அவள் முகத்துக்கு மெத்தை!
அப்பாவுடன் தான் தூங்குவேன் என
அவள் அடம் பிடிக்க...
அவள் தூங்கிய பின் நான் தூங்க...
இப்படி சென்ற வாழ்க்கையில்
இயற்கை செய்தது மாற்றம்...
'பெரிய மனுஷி' ஆகிவிட்டாள்!
முகத்தில் முகம் முட்டி
மழலை பேசியவள்
இப்போது அப்பாவை தொடக் கூடாதாம்!
வெளியில் செல்லும் போது
அவள் கை பிடித்து நடக்கிறேன்...
மற்றவர்கள் பார்க்க, கை தானாக பிரிகிறது!
ஏற்றுக் கொள்ள மறுத்து மனம்
துடி துடித்து துவண்டு போகிறது
அவள் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ!
படிப்பு, படிப்பு, படிப்பு என
பறந்து போகிறாள் கல்லூரிக்கு
பார்த்து மகிழ்கிறேன் நான்!
கல்லூரியில் நடந்ததை சொல்வாள் என
மாலையில் காத்திருக்கும் வேளையில்
'ஆஸ் யூஷுவல் அப்பா... தூக்கம் வருது!'
அம்மாவிடம் அதிகம் பேசுவதில்லை
அண்ணனிடம் அறவே இல்லை...
அப்பனான நான் பித்தனாகி நிற்கிறேன்!
அவளுக்கு வயது19; எனக்கு 48
காத்திருப்பேன் மகளே...
இன்னும் சில ஆண்டுகள்...
உன் மகள் என் குறை தீர்ப்பாள் என்று!
— ஏ.மீனாட்சி சுந்தரம்,
சென்னை.

