
இடி இறங்கும் காலம்!
பணம் சேரச்சேர
அது தன்னை
தானே தின்றுவிடுமா?
என்ன வந்தாலும்
நிரம்ப மறுக்கிறது
எப்போதும்
இதய கஜானா!
பணம் நிறைவைப் பிரசவிப்பதில்லை...
அது, ஆசை முட்டையிட்டு
அடைகாக்கிறது!
அன்பை ஆகுதியாக்கி
பெற்ற பிள்ளைகள்
பட்டம் பெற்ற கையோடு
பறந்து விடுகின்றனர்
தூர தேசங்களுக்கு
கடல் தாண்டி
அவர்கள் சிறகடிப்பது
கவுரவம் சம்பாதிக்க!
விமானங்களில் பயணிக்கையிலேயே
பண்பையும், பாசத்தையும்
உச்சியிலிருந்து உதிர்த்து
இதயத்தை மயானமாக்கி
கண் மறைகின்றனர்!
மேல்நாடுகளின்
மேகம் தொடும்
அபார்ட்மென்டுகளில்
அல்லும் பகலும்
கணினிகளோடு கரைந்து
புதையல் வேட்டையில்
புகுந்து விடுகின்றன
இளந்தளிர்கள்!
கண்டம் விட்டு
கண்டம் கடந்துவந்த
பெயர்தெரியாப் பறவைகள்
குளிர்காலத்தின்
கூதல் முடிந்தவுடன்
தாய்நாடு திரும்புகின்றன
'தங்கள் துணையோடு!'
இந்த
பணப்பறவைகளோ
வேறு இனப்பறவைகளோடு
ஜோடி சேர்ந்து
வந்து இறங்குகின்றன
பெற்றோர்களின் எதிர்பார்ப்பில்
இடியைப் பொழிந்தபடி!
— சுவாதி, நெல்லை.