
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலம்!
கோவணம்
கட்டத் தெரியாத
இக்காலத்திலும்
பேருந்து நிலையங்களில்
அர்ணா கயிறு
விற்கிறார் ஒருவர்!
ஜீரண சக்திக்கு
பற்பல மருந்துகள்
வந்து விட்டபோதும்
இஞ்சி மிட்டாய்
விற்கிறார் ஒருவர்!
வாசல் முற்றம்
தெரியாமல் அடுக்குமாடி
குடியிருப்புகள்
வந்து விட்டபோதும்
தெரு தெருவாய்
கோல மாவு
விற்கிறார் ஒருவர்!
தன் எதிர்காலம்
அறியாமல் பிறர்
எதிர்காலம் சொல்லும்
கூண்டுக்கிளி வைத்து
பிழைத்து வருகிறார்
ஒருவர்!
வீதிக்கு வீதி
காய்கறிகள் விற்கும்
'ஏசி' சூப்பர் மார்க்கெட்டுகள்
வந்து விட்டபோதும்
தெருவில்
கூறு கட்டி காய்கறி
விற்கிறார் ஒரு பாட்டி!
யாரையும் ஏமாற்றாமல்
எக்காலத்திலும்
வாழ வைத்து கொண்டிருக்கிறது
உழைப்பும், முயற்சியும்
நம்பிக்கையும்!
— சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.

