PUBLISHED ON : ஜன 03, 2016

வானம் வசப்படும்!
கேள்விக்குறி போல்
வளைந்து நெளிந்து போகாதே
சற்று நிமிர்ந்து நில்
எல்லாருக்கும் நீயே வியப்புக்குறி!
கருவில் உருவாகும் போதே
வாழ்க்கைப் பாடத்தின்
கேள்வியும், பதிலும் எழுதப்பட்டு விடுகிறது...
எந்தக் கேள்விக்கு எது பதில்
எந்தப் பூட்டுக்கு எது சாவி
கண்டுபிடிப்பதே வாழ்க்கை
வாழ்க்கையை வென்று முடி!
தம்மை புதைக்கப்பட்டதை
எண்ணி விதைகள்
பூமிக்குள் முடங்கி விடுவதில்லை
விதைக்கப்பட்டதாய் எண்ணி
உயிர்த்தெழுந்து முட்டி முட்டி
வெளியே முகத்தைக் காட்டி
தன் முகவரி எழுதுகிறது!
தட்டாமல் எந்தக் கதவும் திறக்காது
வலியின்றி எந்தக் குழந்தையும் பிறக்காது
உளியின் வலி பொறு
அழகான சிலையாவாய்!
சோதனை, வேதனை, தோல்விகள்
இவையெல்லாம் அவமானங்கள் அல்ல
அனுபவங்கள்...
அனுபவங்களே ஆசான்கள்
வெற்றிக்கு முன் கிடைக்கும் விழுப்புண்கள்!
முடியும் என்றால்
விடியாத இரவே கிடையாது
உன்னால் முடியாதது
உலகில் எதுவுமில்லை
முயற்சி தான் முதற்படி
அடுத்து வருவதெல்லாம் வெற்றிப்படி!
இதுவரை நீ சுமந்திருந்தது
சிலுவையல்ல...
சிறகுகள்!
சிறகை விரி, விண்ணில் பற
வானம் உன் வசப்படும்!
— மீனா சுந்தர், காஞ்சிபுரம்.
