
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முரண்பாடு!
சுட்டெரிக்கும்
சூரியனை
வசைபாடுகிறோம்
அதுவே அடைமழையில்
வெயில் வந்தால்
வாழ்த்துப் பாடுகிறோம்!
'தரிசு' என்று பெயர் சூட்டி
தள்ளி வைக்கிறோம்
அதுவே
புதையல் இருக்கும்
பூமியாக இருந்தால்
முத்தமிடுகிறோம்!
புயலோடு காற்றடித்தால்
புறம் பேசுகிறோம்
அதுவே இதமான தென்றல் என்றால்
வரவேற்கிறோம்!
ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தால்
ஆற்றாமையால் கொதிக்கிறோம்
அதுவே அமைதியாக இருந்தால்
தெய்வமாக துதிக்கிறோம்!
துன்பம் வந்தால்
தூற்றுவதும்
இன்பம் வந்தால்
பாராட்டுவதும்
மனித இனத்தின்
மாறாத கோட்பாடு!
இரண்டுமே கலந்திருப்பது
தானே வாழ்க்கை
பிறகென்ன இந்த முரண்பாடு!
— வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.

