
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனக்குமுறல்!
மலரென்றும் மதியென்றும்
மயக்க வேண்டாம்
மதிக்காமல் பெண்ணை
மிதித்து நசுக்கவும் வேண்டாம்!
கற்புக்கரசி என்று
கற்சிலை வேண்டாம்
கணவருக்கடிமையென
சாஸ்திரமும் கொள்ள வேண்டாம்!
கங்கை, காவிரி என்று
பெயரிட வேண்டாம்
கருவறையிலேயே அவளுக்கு
கல்லறையும் கட்ட வேண்டாம்!
புனித பொருளாகவும்
எண்ண வேண்டாம்
போகப் பொருளாகவும்
கருத வேண்டாம்!
பெண்ணை பெண்ணென
மட்டும் மதித்திடுவீர்
இது பெண்ணீயம்
அல்ல தோழரே...
ஒரு பெண்மையின்
வேண்டுகோள்!
கலைப் பொருளாய் பாவிக்கும்
பார்வை போக்கி
வடிவத்தை வடித்திடும்
கவிதை நீக்கி - அவளை
அவளாகவே பார்த்திடு!
சீதையை தீயிட்டுக்
கொளுத்தவும் வேண்டாம்
கண்ணகிக்கு தீயிடும்
அதிகாரமும் வேண்டாம்!
பெண்ணடிமை இல்லையெனில்
பெண் விடுதலை வேண்டாம்
பயமுறுத்தல் இல்லையெனில்
பாதுகாப்பும் தேவையில்லை!
பெண்ணுரிமை கொடுக்கப்பட
வேண்டியதல்ல
மறுக்கப்படக் கூடாதது!
— எம். மங்கையர்க்கரசி, 
கோவை.

