PUBLISHED ON : ஜூலை 16, 2017

அ நிறம் | அளவு
ஊர் நினைப்பு!
நான் இல்லாமலேயே
எங்கோ வெகு தூரத்தில்
இருந்து கொண்டு தான் இருக்கிறது
என் ஊர்!
என் கால் தடம் படாத
அந்தக் காட்டாறும்
மழை வந்தால் நீர் தருவதும்
வராத காலங்களில்
மணல் சுடுவதுமாகத்தான் இருக்கக் கூடும்!
என் குரலுக்கு மயங்கிய
அந்த மலைக் குகைகள்
எப்போதும் போல்
யாரோ ஒருவரின் குரலை
எதிரொலித்துக் கொண்டு தான் இருக்கும்!
முள்ளில் பெயரெழுதி மகிழ்ந்த
அந்தக் கள்ளிச் செடி
வேர் பரப்பி பூத்திருக்கவே செய்யும்!
நான் தண்ணீர் ஊற்றி வளர்த்த
தென்னை மரங்களும்
ஒற்றைப் பலா மரமும்
கனிகளையும் காய்களையும்
கொடுத்தபடிதான் நின்றிருக்கும்!
ஊர் விட்டு, வீட்டை விட்டு
என்னைப் போல்
நகரம் பெயர்ந்த யாரையும்
இங்கே கோபுரம் கட்டி வாழ்ந்தாலும்
வாட்டிக் கொண்டு தான் இருக்கும்
எப்போதும் ஊர் நினைப்பு!
இ.எஸ்.லலிதாமதி, சென்னை.
