
கண்ணா நீ எங்கே?
கோகுலக் கண்ணா
நீ நரகாசுரனை
வதம் செய்து விட்டதாய்
தீபாவளி கொண்டாடுகிறோம் நாங்கள்!
உன்னால் வதம் செய்யப்பட வேண்டிய
நரகாசுரர்களோ இன்னும் நிறைய...
மரங்களை, வனங்களை
பிறர் மனங்களை கொன்றவர்கள்!
ஜாதி, மத
அரசியல் கொலையாளர்கள்
பெண்களுக்கு எதிரான
வன்கொடுமையாளர்கள்...
தெய்வம் நீ
அசுரனைக் கொன்றாய்
இங்கே...
மிருகங்களைப் போல்
மனிதனை மனிதனே
வேட்டையாடுகிறான்!
பணத்தை சுவாசித்து
வாழப் பழகிவிட்ட மனிதன்
செய்யத் தகாதவற்றையும்
செய்யத் துணிந்து விடுகிறான்!
வாழ வைத்து வாழு என்று
வரையறுத்து
அழித்து வாழ்ந்து
முரண்பட்டுப் போகிறான்!
மனிதம் இருப்பதால் தானே
மனிதன் என்று பெயர் - இந்த
இரண்டின் கலவையை எப்படி அழைப்பது?
நல்லவர்களை வாழ்விக்க
கெட்டவர்களை அழித்தாய் நீ...
இன்று தீயவை வளர்ந்தோங்கி
நல்லவை அழிகிறது!
நீ வெண்ணெய் திருடி விளையாடினாய்...
எங்களவர்கள்
பிறர் வாழ்க்கையைத் திருடி
அரை நிர்வாணமாய்
அலைய விடுகின்றனர்!
பேராசை வரம் பெற்ற அசுரர்கள்...
வாழும் போதே நரகம் காட்டும்
பெருநோய் சாபக்கேடு...
இது நிதர்சன உண்மை!
ஒன்றின் அழிவில் தான்
இன்னொன்றின் வளர்ச்சி
இது விதி...
அழிவின் விளிம்பில்
மனிதன் நின்று கொண்டிருக்கிறான்
கண்ணா... நீ எங்கே?
— எஸ்.செல்வம்,
அருப்புக்கோட்டை

