PUBLISHED ON : ஏப் 01, 2018

அ நிறம் | அளவு
விடியும் வரை காத்திருக்காதே!
விடிவதற்குள் வேலையை
ஆரம்பித்து விடு
வேலை இல்லை என
துாங்கி சுகம் காணாதே!
ஓடும் மனிதர்களோடு
நீயும் சேர்ந்து கொள்
எந்த வேலையும் இழிவல்ல
குப்பையை சுமந்தாலும்
கூலி கிடைக்கும்!
பட்டதாரி என்பதை மற
பலதரப்பட்ட வேலைகள்
உன் முன்
கொட்டிக் கிடக்கின்றன!
சிறகடித்து பறந்து
திரிந்தால் தான்
பறவைக்கும் உணவு கிடைக்கும்
பதுங்கி, பாய்ந்து, ஓடி
உருண்டால் தான்
புலிக்கும் இரை கிடைக்கும்!
அழுதால் தான் பால் கிடைக்கும்
குழந்தைக்கும் தெரிகிறது
படிப்பிற்கு ஏற்ற வேலை
உழைப்பிற்கேற்ற ஊதியம்
யாரும் தருவதில்லை!
உழைப்பை முழுவதும்
ஊதியமாக்க கற்றுக்கொள்
உனக்கும் விடியும்
ஒருநாள் இனிதாக!
—பாரதி சேகர், சென்னை.
