PUBLISHED ON : ஜூலை 01, 2018

புன்னகையாய நமக...
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...
குறைகள் நம் குற்றங்களல்ல
நிறைகளாய் மாற்ற நித்திய
முயற்சி ஒன்று போதும்!
இந்த வாழ்வையும், தாழ்வையும்
விரலசைவில் மாற்றி விடலாம்
விழிப்புடன்
மனமசைத்தால் போதும்!
காலம் நம்மை வதைத்தாலும்
காலனையும் நம்
காலால் எட்டி உதைக்கலாம்
திறமையை தினம்
திரட்டி வைத்தால் போதும்!
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...
நம்மை எதுவும், எது செய்தாலும்
துளியும் துவளாமல் சிரிக்கலாம்
துணிவைப் பதியனிட்டால் போதும்!
துன்பமே நம்மைத் துவட்டினாலும்
துடைத்து விட்டு சிரிக்கலாம்
நம்பிக்கையுடன்
உழைப்பிருந்தால் போதும்!
இந்த வாழ்வை
இனிமையாக்கும் மந்திரம்
ஒன்று சொல்கிறேன்...
பெரிதாக ஒன்றுமில்லை...
'புன்னகையாய நமக' போதும்!
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...
குணம் கொல்லும் கோபத்திலும்
நம்மை வாட்டும் துரோகத்திலும்
மனம் விட்டுச் சிரிக்கலாம்
அன்புப்பயிர் வளர்த்தால் போதும்...
சந்தோஷ சாம்ராஜ்யம்
நம் கையில்!
- செல்லம் ரகு, திருப்பூர்.
