PUBLISHED ON : ஜூலை 08, 2018

அ நிறம் | அளவு
பெண்ணின் பெருந்துயர்!
உறக்கத்தில் ஆழ்ந்திருந்த
யசோதரையை தவிக்க விட்டு
நள்ளிரவில் ஓடி
ஞானம் பெற்றான் புத்தன்!
எவரோ சொன்ன அவச்சொல்லுக்காய்
சீதையை நெருப்பில் இறக்கி
தன்னை
துாய்மைப்படுத்திக் கொண்டான் ராமன்!
இந்திரனின் பொய் கூவலுக்கு ஏமாந்து
நடு இரவில் குளிக்கப்போன கவுதம முனி
அகலிகையை கல்லாய் சபித்து
கவுரவம் காத்துக் கொண்டான்!
தனித்து இயங்கி
தன்னை விடவும்
உயர்ந்து விடக் கூடாதென்ற
உள்ளரசியலில் தான்
உமைக்கு இடபாகம் கொடுத்திருக்க வேண்டும்
சிவன்!
கஸ்துாரிபாயின்
தியாகமும் உழைப்புமின்றி
தேசத்தின் தந்தையாய்
உயர்ந்திருக்க முடியாது காந்தியால்!
சரித்திரம் புராணம் எதுவானாலும்
ஆணின் அத்தனை உயர்வுகளுக்கும்
பின்புலமாக இருந்திருக்கிறாள் பெண்
பெண்ணின் அத்தனைப்
பெருந்துயரங்களுக்கும்
காரணமாக இருந்திருக்கிறான், ஆண்!
எம்.சித்ராதேவி, சென்னை
