PUBLISHED ON : செப் 30, 2018

அது, அந்த காலம்!
நேர்மை, நியாயம்
ஈவு, இரக்கம்
என்பது இங்கே
போயாச்சு...
நியாயமற்ற
செயல்கள் செய்வது
நித்திய கர்மம்
என்றாச்சு!
பெண்ணை கடவுள்
என்று போற்றியது
கடந்த காலம்
என்றாச்சு...
கடத்திச்சென்று
கற்பழிக்கிற நாடாய்
இந்த நாடாச்சு!
தேவைக்காக
பணத்தை தேடி
அலைந்து திரிந்தது
அந்த காலம்...
பணத்துக்காக
படுகொலை செய்து
பகட்டாய் திரிவது
இந்த காலம்!
வெள்ளை சட்டை,
வேட்டி அணிந்தால்
உள்ளம் உயர்ந்தது
அந்த காலம்...
கொள்ளையடித்து
கும்பல் பிடித்து
குலவச் செய்வது
இந்த காலம்!
கட்டுக்கோப்பாய்
கற்ற வழியில்
பிழைப்பு செய்தது
அந்த காலம்...
பொட்டு நகைக்காய்
போட்டுத் தள்ளி
பூரிக்கிறதே இந்த காலம்!
அண்ணல் காந்தி,
நேரு என்றால்,
கண்கள் கசிந்தது
அந்த காலம்...
அடிக்கிற கொள்ளையை
பார்த்து அந்த சிலைகள்
சிரிக்குது இந்த காலம்!
இந்நாட்டு
பெருமையென்று இதை
அந்நியர் அறிய
வாய்ப்பில்லை...
சொந்த நாட்டான்
இப்படி நடப்பது
கொஞ்சம் கூட
சரியில்லை!
- ஆர்.அம்பிகா, நெல்லை.
