
பூங்காவனமாய் பூத்துக்குலுங்கும் புத்தாண்டு!
வண்ணங்கள் தடம் மாறி
வானவில்லாய் வளைவது போல்
எண்ணங்களின் வீச்சில்
என்றென்றும் இளமையோடு
வீறுநடை போடும்
ஒவ்வொரு நாளும்
இதயங்களை வசீகரிக்கும்
இனிமையான நாட்களாக வேண்டும்!
நாட்கள் நகர்ந்து கொண்டே
இருந்தாலும்...
பூக்களை போல் நிதமும்
பூமணம் வீச வேண்டும்!
பூப்போன்ற நாட்கள்
புனிதம் சேர்க்கும்
வசந்த வாழ்க்கையாய்
அனைவரையும்
வசப்படுத்த வேண்டும்!
வசப்படுத்திய வாழ்க்கையை
சுகப்படுத்தும் வல்லமையை
மீட்டெடுக்கும் உன்னதம்
ஒவ்வொருவருக்குள்ளும்
உயிர்த்தெழ வேண்டும்!
உயிர்த்தெழும் மனிதாபிமான
உணர்வுகளுக்கு
கலங்கரை விளக்கமாய் நின்று
காலங்கள்
கைபிடித்து செல்ல வேண்டும்!
கையசைவுகளில் மிளிர்கின்ற
கண நேர பொழுதுகளும்
கை காட்டி மரங்களாய்
எல்லாருக்கும்
வழி காட்டிட வேண்டும்!
வழிகாட்டிகள் இல்லாத
வனாந்திரத்தின்
தீராத திக்குகள் தோறும்
திசைகாட்டிகளாய்
எல்லா காலங்களும்
இயங்கிட வேண்டும்!
இயங்குதல் இல்லையேல்
வாழ்க்கையில்லை என்பதை
ஒவ்வொரு மனிதருக்குள்ளும்
உணர்த்திடல் வேண்டும்!
உணரும் காலங்கள்
உச்சம் தொட்ட
உயர்வின் கோலங்களாய்
நம்மை விட்டு
கடந்த காலங்கள்
காணாமல் போனாலும்...
இனி, வருங்காலங்கள்
எல்லாருக்கும்
இனிய பூங்காவனமாய்
என்றென்றும்
பூத்துக் குலுங்கட்டும்
இந்த இனிய புத்தாண்டு!
ஜோதி பாரதி, தேனி.

