PUBLISHED ON : செப் 15, 2019
அ நிறம் | அளவு
பிழைப்பு!
நீயும் அரசியல்வாதி
நானும் அரசியல்வாதி
யார் சின்ன திருடன்
என்பது தான் கேள்வி!
என் மீது
குற்றம் சொல்ல
உனக்கு என்ன தகுதி
இருக்கிறது?
உன் வீட்டில், 'ரெய்டு'
என் வீட்டிலும், 'ரெய்டு'
கணக்கில் வராத
கட்டு கட்டாய் பணம்!
நீயும்
வாரிசை வளர்க்கிறாய்
நானும்
வாரிசை வளர்க்கிறேன்!
உன் கட்சிக்காரன்
பாலியல் குற்றவாளி
என் கட்சிக்காரனும்
பாலியல் குற்றவாளி!
உன் மீதும்
கிரிமினல் வழக்கு
என் மீதும்
கிரிமினல் வழக்கு!
அசிங்கமாக
திட்டிவிட்டு பின்
வந்து இணைந்தாலும்
சேர்த்துக் கொள்கிறாய்!
நானும் திட்டியவர்களை
கட்டியணைத்து
வரவேற்று,
பதவி கொடுக்கிறேன்!
இப்படியாக
நீயும், நானும்
ஒன்றாக இருந்தாலும்,
கட்சிகள் வேறு வேறு!
எதிர் எதிர் துருவமாக
நாம் இருப்பினும்
பொய் சொல்லி பிழைப்பதில்
ஒற்றுமையானவர்கள்
தானே?
— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.
