
வேண்டும், வேண்டும்!
எத்தனையோ தோல்விகள் எதிர் வந்தாலும்
எத்தனை தடைகள் இடறி விட்டாலும்
அத்தனையும் தாண்டும் ஆற்றல் வேண்டும்!
நேற்றைய நினைவுகளில் நிலைகுலையாமல்
நாளைய நினைவுகளில் நசுங்கி விடாமல்
இன்றைய நினைவுகளில் நிலைக்க வேண்டும்!
கெடுக்கின்ற கெட்ட குணம் இல்லாமல்
தடுத்துவிடும் பொறாமை மனம் இல்லாமல்
கொடுத்து மகிழும் கொள்கை வேண்டும்!
பழி வாங்கும் பாதகம் செய்யாமல்
குழி பறிக்கும் கொடூரம் இல்லாமல்
வழி காட்டும் வல்லமை வேண்டும்!
எதிலும் நம்பிக்கையின்றி நலியாமல்
விதியை எண்ணி வீழ்ந்து விடாமல்
புதிய சாதனை படைக்க புறப்பட வேண்டும்!
போதையெனும் புழுதியில் புரளாமல்
பாலியல் எனும் படுகுழியில் விழாமல் - நல்ல
பாதை அமைக்கும் பக்குவம் வேண்டும்!
வன்முறையெனும் அரக்கனை அழித்து
வஞ்சகம் எனும் வலையை அறுத்து
நன்முறை காணும் நாட்டம் வேண்டும்!
பொய்களை சொல்லி பிழைப்பு நடத்தாமல்
புரணிகள் பேசி பூசல்கள் வளர்க்காமல்
மெய்களை பேசும் மேன்மை வேண்டும்!
சோம்பல் எனும் பாவியை அழித்து
சோர்வு எனும் நோய்தனை ஒழித்து
சுறுசுறுப்பு என்றும் சுடர்விட வேண்டும்!
படுத்து கிடந்தால் நிலமே நமக்கு பாயாகும்
எழுந்து நடந்தால் அதுவே நமக்கு பாதையாகும்
எடுத்த முயற்சியில் ஏற்றம் வந்தால்
எல்லாம் வெற்றியாய் இனிதே முடியும்!
இளசை சுந்தரம், மதுரை