
பொங்கலும் புது நெல்லும்!
சளைக்காமல்
மூணு போகம் விளைந்த
முத்தச்சி வயக்காடு!
கோடை கதிரில
குருவி தின்ன மிச்சம்
கூடையில கிடைச்சா போதுமுன்னு
சொல்லாம கொடுக்கும்
கொடை வள்ளலு!
அறுத்த மிச்சம்
ஆடும், மாடும் அசை போடும்
ஆசைப்பட்ட ஆகாயம்
அடுத்த விளைச்சலுக்கு
அடி போடும்!
வாய்க்காலில் வரும்
முறை தண்ணி வஞ்சமில்லாம
பக்கத்து காட்டு பயிரையும்
பாசத்தில நனைச்சு போகும்!
நண்டு, தவளை குடியேறி
நட்டவனுக்கு நன்றி சொல்லும்
வரப்பு எல்லை எதிரிய கூட
இஷ்டப்பட்டு சுமந்து செல்லும்!
வாங்கிய கடனுக்கு
வளர்ச்சி இல்லாம போனாலும்
வரப்பும், வயலும்
தளர்ச்சி அடஞ்சதில்ல!
குச்சி வீடெல்லாம்
மச்சு வீடா மாறிப் போனதுல
மாதம் மும்மாரி பெஞ்ச மழை
வருஷக்கணக்கா வராம போச்சு!
பொங்கலுக்கு பொங்கல்
புது நெல்லு தந்த
விவசாயி வீட்டில இப்ப
பொங்கல் வைக்க கூட
புது பானை இல்ல!
ஆனாலும்
விதை நெல்ல விதைக்காம
விடியலே வருவதில்ல
விவசாயிக்கு மட்டும்!
க. அழகர்சாமி,
கொச்சி.