PUBLISHED ON : மார் 29, 2020

சுய பரிசோதனை
நீங்கள் யார்...
வெட்டுக் கிளியா, வண்ணத்துப் பூச்சியா?
வெட்டுக்கிளி, பூக்களை வெட்டிப் போடும்
வண்ணத்துப் பூச்சி, மகரந்த சேர்க்கை செய்யும்!
நீங்கள் யார்...
கத்தரிக்கோலா, ஊசியா?
கத்தரிக்கோல், வெட்ட மட்டுமே செய்யும்
ஊசி தான், ஒட்டித் தைத்து ஒன்றாக்கும்!
நீங்கள் யார்...
முறமா, சல்லடையா?
முறம், நல்லதை தேக்கி, அல்லதை ஒதுக்கும்
சல்லடையோ, கழிவுகளைத் தேக்கும்!
* நீங்கள் யார்...
சுவர்களா, பாலங்களா?
சுவர்கள், ஒன்றாயிருப்பதை பிரித்துப் போடும்
பாலங்களோ, பாதைகளை இணைக்கும்!
நீங்கள் யார்...
ஈசலா, எறும்புகளா?
ஈசல், கண நேரமே ஜொலிக்கும்
எறும்பு, காலமெல்லாம் உழைக்கும்!
நீங்கள் யார்...
கொசுவா, தேனீயா?
கொசு கடித்தால், நோய் வரும்
தேன் குடித்தால், நோய் போகும்!
நீங்கள் யார்...
களையா, பயிரா?
களை, காட்டைக் கெடுக்கும்
பயிர் தான், நாட்டை காக்கும்!
நீங்கள் யார்...
நெருஞ்சி முள்ளா, கடிகார முள்ளா?
நெருஞ்சி முள், காலில் குத்தும்
கடிகார முள், காலத்தை காட்டும்!
நீங்கள் யார்...
கூடா, கூண்டா?
கூடு என்றால், நீங்கள் கட்டிக் கொள்வது
கூண்டு என்றால், பிறர் பிடியில் சிக்குவது!
இளசை சுந்தரம், மதுரை
