PUBLISHED ON : மே 22, 2011

அவளை பார்த்த ஞாபகத்தில்...
* அவளைப் பார்த்த அந்த நொடி
உயிரில் ஜீவநதி உருண்டோடி
உயிர் மலரக் கண்டேன்!
* ஊரே தூங்கும் போது...
இமை மூடாதிருந்தேன்...
உள்ளத்தில் அவளை வைத்து
உலகத்தை மறந்து போனேன்,
அவளை பார்த்த ஞாபகத்தில்!
* வெள்ளை அணு, சிவப்பணு
சண்டையிட்டு காதலாகி
காதலின் காலடியில்
கண்கள் பூத்து நின்றேன்,
அவளை பார்த்த ஞாபகத்தில்...
* தனிமை உணர்வுகளை ரசித்து,
தனியே பேசி சிரித்து,
வெட்கம் மறந்து,
வினாடிக்குள் கரைந்து போனேன்,
அவளை பார்த்த ஞாபகத்தில்!
* மின்னல்கள் கூத்தாடி
கண்கள் கொய்து போனாள் -அந்த
பூகம்ப அலைகளில்
புன்னகை மறந்து போனேன்,
அவளை பார்த்த ஞாபகத்தில்!
* இரவில் கதிரவனையும்,
பகலில் நிலவையும் தேடும்
விசித்திரமான வியாதிக்குள்
வீழ்ந்து கிடந்தேன்,
அவளை பார்த்த ஞாபகத்தில்!
* கிறுக்கல்கள் கவிதையென
உணர்ந்தேன்...
கிழக்கு வெளுக்கும் முன்
விழித்தெழுந்தேன்,
அவளை பார்த்த ஞாபகத்தில்!
* தாயின் கருவறைக்குள்
ஈரைந்து மாதம் இருந்த
இன்பம் போல் இருந்தது,
அவளை பார்த்த அந்த நொடி!
* உயிரின் ஈரம்
உலர்ந்து போகுமுன்
மீண்டும் ஒரு முறை
பார்ப்பேனா அவளை!
* அவள் நினைவுகளே
வாழ்க்கை என்றான பிறகு,
அவள் தொடும் தூரத்தில்
இருந்தாலென்ன...
தொலை தூரத்தில் இருந்தாலென்ன!
— க.மோகன், அறந்தாங்கி.
