PUBLISHED ON : டிச 06, 2020

உயர்வும் தாழ்வும்!
கீழ் நிலையால் பார்க்கப்படும்
எதுவொன்றும்
காலச் சுழற்சியில்
உயரத்தில் சென்று அமரும்!
வறுமையால்
கிழிந்த ஆடை உடுத்துவது
கேவலமாய் பார்க்கப்பட்டது...
இன்று கிழித்துவிட்டு தைப்பதே
பேஷனாகிப் போனது!
பழைய சோறும் கூழும்
ஏழைகளின் உணவென்று
ஏளனமாய் கருதப்பட்டது...
இன்று, 'ஏசி' உணவகங்கள்
அவற்றை விற்பனைக்கு வைத்து
ஆரோக்கிய உணவென்று
அறுதியிட்டுக் கூறுகின்றன!
வியர்வை சிந்தி, மிதி வண்டி
மிதித்தவர்களின் கனவு
மோட்டார் பைக்காக இருந்தது...
இன்று, வீதிகளில்
'ஸ்மார்ட்' சைக்கிள் வாடகைக்கு வந்து
உடல்நலத்தை பேணச் சொல்கிறது!
மஞ்சள் துணிப் பையை
புறம் தள்ளி
மக்காத நெகிழிப் பைகள்
அரசாண்டது ஒரு காலம்...
இன்று, மாசு கேடென்று
அவை ஒதுக்கப்பட்டு
பட்டொளி வீசுகின்றன
பருத்திப் பைகள்!
உயர்வும் தாழ்வும்
பார்க்கும் பார்வையில்தானே ஒழிய
பயன்படுத்தப்படும்
பொருட்களில் அல்ல!
இ.எஸ். லலிதாமதி, சென்னை.
