PUBLISHED ON : மே 09, 2021

மே 9, அன்னையர் தினம்! - மறக்கவில்லை அம்மா!
ஆராரோ... ஆரிரரோ - என
தாலாட்டு பாடும்போதே
வாழ்வின் சூட்சுமத்தைக்
கற்றுக் கொடுத்தவள் நீ!
கூழ் குடித்துறங்கினாலும்
கூடி வாழ்தலையும்
மனிதர்களை நேசிக்கும் பண்பையும்
ஊட்டி வளர்த்தவள் நீ!
கணக்கு பார்த்து கடமை ஆற்றாமல்
வேளை பொழுதில்லாமல்
வேலை செய்வதற்கு
உரமிட்டவள் நீ!
அதிகாரம் என்ற பெயரில்
அநியாயம் செய்வதற்கும்
துதிப்பாடி சுகித்திருக்கவும்
கற்றுத் தரவில்லை நீ!
வாது வழக்கோ
வம்பு தும்பு செய்யவோ
யாரையும் நிந்திக்கவோ
வழி காட்டவில்லை நீ!
தேடிய பொருளை
மறைத்து வைக்காமல்
பசித்து வந்தவரின் பசியாற்ற
பாங்காய் எடுத்துரைத்தவள் நீ!
சக மனிதர் கண்ணீர்
மண்ணில் வீழ்வதற்குள்
மடியில் ஏந்த
சொன்னவள் நீ!
ஜீவன் இருக்குமட்டும்
கள்ளப் பிழைப்பு செய்யாமல்
பழி பாவங்களுக்கு அஞ்சி
நீதி நெறி தவறாமல்
வாழ்வாங்கு வாழ சொன்னவள் நீ!
வாழ்க்கைக் கோட்டையின்
பூட்டைத் திறக்க
சாவி கொடுக்க வந்த
சரித்திர புருஷர்கள் பலருண்டு...
ஆனாலும், நீ கொடுத்த
அன்பு சாவி மட்டுமே
நிலை தடுமாறாமல்
உலகில் உழல வைக்கிறது!
மானுக்குள் மறைந்திருக்கும்
கஸ்துாரி போல்
பாசப் பூக்களை மனதிற்குள்
குடியிருக்க செய்தவள் நீ!
தொட்டிலில் கற்றுக் கொண்டது
இறுதி வரை என்ற மரபை
மறக்கவில்லை அம்மா...
நீ விதைத்த விதை
வீரியத்துடன் முளைத்தெழுந்து
விருட்சமாகி வளர்ந்துள்ளது!
நீ சொல்லிக் கொடுத்த
வழியில் செல்வதைத் தவிர - உனக்கு
வேறென்ன பிரதியுபகாரம்
செய்துவிட முடியும் அம்மா!
செல்வி நடேசன்,
சென்னை.
