PUBLISHED ON : செப் 19, 2021

அமைதி எனும் அமுதம்!
மனித மனதின்
ஏக்கங்கள் பல...
ஆனால்
இலக்கு ஒன்று!
பேராசைக்கும்
நிராசைக்கும் இடையே
'பெண்டுலமாய்' ஆடுகிறது
சஞ்சல மனம்!
பேராசையும்
நிராசையும்
ஆளுக்கொரு பக்கமாக
போர்க்கடல் எனும்
பாற்கடல் கடைய
வந்த அமுதம்
அமைதி!
அமைதி அமுதத்தை
கடைந்தெடுத்ததை
கவுரவிக்கும் தினமே
செப்டம்பர் இருபத்தொன்று!
அந்த நாள் -
போருக்கு
முற்றுப்புள்ளி வைத்ததோ இல்லையோ
அமைதிக்கு
வெற்றித் திலகம் வைத்தது!
உலகம் -
பெற்றுத் தந்த வெற்றிகளை விட
கற்றுத் தந்த அமைதி
வென்றவருக்கும், தோற்றவருக்கும்
வெற்றியை
பகிர்ந்து தந்து, பரிசாயிற்று!
தேவையே
கண்டுபிடிப்பவர்களின் தாயாம்
தேவையை
இல்லாமற் செய்ய
கண்டுபிடித்த
அமைதியை என்னவென்பது?
இன்றளவும் -
மூள இருக்கும் போர்களுக்கு
முட்டுக்கட்டை போடுகிறது
ஐக்கிய நாடுகள் சபையின்
அமைதிச் சபை!
மறந்து போய்விட்ட
பிறந்த நாட்களுக்காக
மன்னிப்பை மன்றாடுகிறோம்!
விடுபட்டு விட்ட
விவாக நாளுக்காக
வேதனைப்படுகிறோம்!
அவையெல்லாம்
நமக்கான நாட்கள்!
உலக அமைதிக்காக,
உலக அமைதி நாளன்று
உலக அமைதி ஓங்க என்று
குரல் கொடுப்பது
பொருள் கொடுப்பதைக் காட்டிலும்
போற்றுதலுக்குரியது!
வளர்கவி, கோவை.
