PUBLISHED ON : டிச 26, 2021

அ நிறம் | அளவு
நம்பிக்கை!
வானத்தை தொட்டு விடலாம்
என்ற நம்பிக்கையில்தான்
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
விதைகள் முளைக்கின்றன!
மறுபடியும் புதிய இலைகள்
துளிர்க்கும் என்று நம்பித்தான்
மரங்கள் எல்லாம்
இலைகளை உதிர்க்கின்றன!
பறந்து சென்ற தாய்ப்பறவை
உணவுடன் திரும்பி வரும்
என்று நம்பியபடியே
குஞ்சுகள் காத்திருக்கின்றன!
விலை உயர்ந்த முத்துகள்
கிடைக்கும் என்று நம்பித்தான்
ஆழமான கடலுக்குள்
மூச்சடக்கிச் செல்கின்றனர்!
பெரிய மீன்கள் வருமென்று
கொக்குகள் நம்புவதால் தான்
ஒற்றைக் காலில் நின்று
அசையாமல் தவமிருக்கின்றன!
அடுத்தமுறை அறுந்து விடாது
என்ற உறுதியான நம்பிக்கையில்
மறுபடியும் மறுபடியும்
சிலந்திகள் வலை பின்னுகின்றன!
நம்பிக்கை மட்டுமே போதாது
முயற்சியும் இருந்தால்தான்
முன்னேறிச் செல்ல முடியும்
நம்பி முயல்வோம், வெற்றி பெறுவோம்!
எஸ். குமாரகிருஷ்ணன்,
புதுச்சேரி.
