தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தந்தையின் (ஆ)தங்கம்!

அன்பு மகனுக்கு

தந்தையர் தினத்தில்

நிந்தைகள் சுமந்து

கந்தையாகக் கிடக்கும்

தந்தையரில் நானும் ஒருவன்!

தினசரி உழைப்பில்

சராசரி அப்பனைப் போல

சாதாரணமாய் வாழ்ந்தாலும்

அசாதாரணக் கனவுகளோடு

உயரத்தின் உச்சத்தில்

உன்னை நிறுத்தியவன் நான்!

நீ அதிகாரியாக வேண்டுமென்று

அப்பா என்ற அதிகார நாற்காலியை

அடகு வைத்தவன் நான்!

தாயை இழந்த தவப்புதல்வனே

சொந்தங்கள் இல்லாத

வாழ்க்கைப் பந்தயத்தில்- நீ

பதக்கங்கள் பெற வேண்டுமென்று

ஒற்றைக்கால் தவம் செய்தேன்!

இருசக்கர வாகனம் கேட்டாய்

உன் மனசு வலிக்கக் கூடாதென்று

தவணை கட்டி, கட்டி

என் நெட்டை விரல்

குட்டை விரலாய் தேய்ந்து போனது!

என் சிறகுகளைத் துண்டித்து

உனக்கு செருப்புகள் செய்தேன்

என் முதுகில் தான்

உனக்கு பாதைகள் அமைத்தேன்!

சின்ன சின்ன சித்திரங்களில்

நினைவு விரல்களால்

சிங்காரக் கோலங்கள் வரைந்தேன்!

ஆனால்

காலம் செய்த

சட்டாம்பிள்ளைதனத்தால்

என் வாழ்வின்

பட்டாம்பூச்சி கனவுகள்

இடி விழுந்த மண்பாண்டமாய்

நொறுங்கிப் போனது!

உன் காதல் மனைவிக்கு

கனவு இல்லம் கட்டுவதற்காக

என் காலடி நிலத்தையும்

உன் காலடியில் வைத்தேன்

கடைசியில்

ஒதுங்குவதற்கு கூட இடமின்றி

ஒதுங்கி கிடக்கிறேன்!

ஆனாலும்

நம்பிக்கைச் சிலுவையில்

தொங்கிக் கொண்டிருக்கிறேன்

உயிர் அறுந்து விழு முன்னே

அப்பா என்று விளித்தபடி

ஓடி வந்து பார்ப்பாய் என்று!

என்.ஆசைத்தம்பி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us