PUBLISHED ON : ஜூலை 17, 2011

இடுகாட்டில் காத்திருப்பேன்!
* என்னைக் கொண்டே
என் மூளை
செல்களுக்குள்
உன் பெயரை
பச்சை குத்திக் கொண்டவளே...
* உன்னுள் கரைந்து
உன் காதலில் நான்
தாய்மை அடைந்தேன்!
* என் மனம்
உன்னால் குப்பையாய் போனதால்,
நீ தீண்டி குப்பையில்
போட்டவைகள் எல்லாம்
பொக்கிஷமாய் என் அறையில்!
* சிவந்து சிரிக்கும்
முற்றத்து ரோஜா...
* தாவி ஓடும்
கொல்லைப்புற அணில் குட்டி...
* ஒவ்வொரு நிகழ்வும்
நொடிக்கொரு தரம்
உன் நினைவுகளை
என்னுள் புதுப்பித்துக் கொண்டே
இருக்கிறது!
* எல்லா பெண்களையும்
போல் தானே நான்,
என்னிடம் புதுமையாய்
எதை கண்டாய்
என ஏளனமாய் கேட்டாய்!
* பிரியமே...
என்னை உன்னில்
மட்டும் தானே காண முடிகிறது!
* வாழும் போது ஒருவராய்
வாழும் நாம்...
மரிக்கும் போது மட்டும்
நான் சிறிது
முந்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்!
* உனக்கு முன்
நான் மரித்து,
மக்கி, மண்ணாகி
உன்னை மலர் போல்
தாங்க,
இடுகாட்டில் காத்திருப்பேன்!
— எஸ்.ஏ.சரவணக்குமார், திருநின்றவூர்.
